மாயாஜாலம் போல ஆர்டிஃபிஷியல் இன்டலிஜன்ஸ் எனப்படும் செய்யறிவு அல்லது செயற்கை நுண்ணறிவு எனும் தொழில்நுட்பம் செய்த விந்தையால், பொறியியல் கலந்தாய்வுக்கு இந்த ஆண்டு சுமார் 2 லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள்.
ஜூன் 6ஆம் தேதி பொறியியல் கலந்தாய்வுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள் என்ற நிலையில், தற்போதே இரண்டு லட்சம் விண்ணப்பங்கள் குவிந்துவிட்டன. எனவே, இன்னும் இரண்டு வாரங்களில் இரண்டு லட்சத்தை தாண்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை 1.48 லட்சம் மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்திவிட்டனர். 1.09 லடச்ம் பேர் தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துவிட்டனர். கடந்த ஆண்டு 2.28 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், வெறும் 1.87 லட்சம் பேர்தான் கலந்தாய்வில் பங்கேற்றிருந்தனர்.
தமிழகத்தில் மொத்தமுள்ள 440 பொறியியல் கல்லூரிகளில் 1.7 லட்சம் சேர்க்கை இடங்கள் உள்ளன. அந்த வகையில் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் மேலும் 10 சதவீத விண்ணப்பங்கள் வரப்பெறலாம் என்று கூறப்படுகிறது.
பொறியியல் துறை மீது மாணவர்களுக்கு ஆர்வம் அதிகரித்ததால், அடிப்படை அறிவியல் பாடங்களான பிஎஸ்சி கணிதம், பிஎஸ்சி இயற்பியல் போன்ற பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் குறைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிலும், பொறியியல் கல்லூரிகளில் இப்போது கணினி அறிவியலுக்கு மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருப்பதும் காரணமாகிறது. அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகமானது, பொறியியல் கல்லூரிகளுக்கு இருந்த மாணவர் சேர்க்கைக்கான அளவை அதிகரித்துக் கொள்ள அனுமதி வழங்கியிருக்கிறது.
அடிப்படை அறிவியல் பாடங்களை எடுத்துப் படிப்பதைக் காட்டிலும் பொறியியல் படித்தால் நல்ல வேலை கிடைக்கும் என்று மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் நம்புகிறார்கள். எனவேதான், பொறியியல் கல்லூரிகளில் வழக்கத்தைக் காட்டிலும் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
கலந்தாய்வு மற்றும் நிர்வாக அடிப்படையிலும் மாணவர்கள் சேர தயாராகிவிட்டனர். கணினி அறிவியல் பொறியியல் பாடத்தைக் காட்டிலும் தற்போது செயற்கை நுண்ணறிவு தொடர்பான செய்திகள் அதிகம் வெளியாகி வருவதால், தகவல் தொழில்நுட்பத் துறை அடுத்தக் கட்டத்துக்கு வளர்ச்சியடையும் அதுவும் செயற்கை நுண்ணறிவு காரணமாக அது பெரிய அளவில் வளரும் என்று மாணவர்கள் கருதுகிறார்கள்.
அதனால்தான், பனிரெண்டாம் வகுப்பு முடித்ததும் நேரடியாக பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை பெறுகிறார்கள் அல்லது கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பதும் அதிகரித்துள்ளது.
அந்த வகையில் பார்த்தால், செயற்கை நுண்ணறிவு தகவல் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்துகிறதோ இல்லையோ, மூட வேண்டிய நிலையில் இருந்த பல கல்லூரிகளுக்கு புத்துயிர் கொடுத்துள்ளது என்றுச் சொல்லலாம். இதுதான் கடந்த 2000ஆவது ஆண்டிலும் நடந்தது. ஒன்று மக்கள் வாழ்வோடு தொடர்பு ஏற்படுத்தும் போது அதன் மீது மக்கள் கவனம் திரும்புகிறது என்கிறார்கள் கல்வியாளர்கள்.
தகவல்தொழில்நுட்பத்தோடு, நாட்டில் எலக்ட்ரானிக்ஸ், செமிகண்டக்டர்ஸ், பாதுகாப்பு மற்றும் விண்வெளி, பயோ-சயின்ஸ் பாடப்பிரிவுகளுக்கும் நல்ல வேலை வாய்ப்பு உள்ளது என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அந்தத் துறைகளிலும் சேர்ந்து பயில மாணவர்கள் முன்வர வேண்டும் என்றும் கல்வியாளர்கள் ஆலோசனை வழங்குகிறார்கள்.