
தமிழகத்தில் உள்ள மற்ற ஏனைய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு சென்னை மாநிலக் கல்லூரி, மாணவர்களிடமிருந்து அதிக விண்ணப்பங்களைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது.
தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றுக்கான மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன. சென்னையில் 10 அரசுக் கல்லூரிகளும், கோவையில் 20 அரசுக் கல்லூரிகளும், வேலூரில் அதிகபட்சமாக 33 அரசுக் கல்லூரிகளும், மதுரையில் 29 கல்லூரிகளும் இயங்கி வருகின்றன.
இதில் அதிகபட்சமாக, சென்னை மாநிலக் கல்லூரிக்கு 2024 - 25ஆம் கல்வியாண்டில் 1.3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள்.
இந்தக் கல்லூரியில் இளநிலைப் படிப்புகளில் ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை எண்ணிக்கை வெறும் 1140 மட்டுமே. இதில், பிஏ பொருளாதாரவியல், பிஏ வரலாறு, பிஎஸ்சி வேதியியல் படிப்புகளில் சேர ஏராளமான மாணவர்கள் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. அடுத்த இடத்தில்தான் பி.காம் உள்ளது. இதற்கு 11 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். அதாவது, ஒரு மாணவர் சேர்க்கை இடத்துக்கு தோராயமாக 120 பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள் என்கிறது புள்ளிவிவரம்.
ஆனால், சென்னையில் உள்ள மற்ற கல்லூரிகளான எத்திராஜ் கல்லூரி, சென்னை கிறிஸ்டியன் கல்லூரி போன்றவற்றில், அதிக மாணவர்கள் பிகாம், கணினி அறிவியல் போன்ற பாடங்களில் சேரவே ஆர்வம் காட்டியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு 1.20 லட்சம் விண்ணப்பங்கள் வந்திருந்த நிலையில், இந்த ஆண்டு இதுவரை 1.34 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில் 53,171 பேர் மாணவிகள். கடந்த ஆண்டைக் காட்டிலும் 10 ஆயிரம் மாணவிகள் இந்த ஆண்டு கூடுதலாக விண்ணப்பித்திருக்கிறார்கள். பெண்களிடையே பிஏ வேதியியல் மற்றும் பிஏ வரலாறு படிக்க ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு விண்ணப்பித்திருப்பவர்களில் சென்னையின் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்தவர்களே அதிகம் என்றும் கூறப்படுகிறது.
ஒரு அரசுக் கல்லூரியில் அதிகபட்சம் ஐந்து படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். கலந்தாய்வு மூலம், மாணவர்கள் தாங்கள் படிக்க விரும்பும் பாடத்தை தேர்வு செய்யலாம்.
தற்போது பிஎஸ்சி கணிதம் பயில மாணவர்களிடையே ஆர்வம் குறைந்து வருகிறதும் புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வருகிறது.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக நவீன கலைக்கூடம், விடுதி, உணவகம் போன்றவற்றை அமைக்கவும் சென்னை மாநிலக் கல்லூரி திட்டமிட்டுள்ளது. இந்த கல்லூரியில், மாணவர்கள் சேர்க்கை தொடங்கிவிட்டது. சிறப்பு மாணவர்களுக்கான கலந்தாய்வு செவ்வாயன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
மற்ற கல்லூரிகளுக்கு சில ஆயிரங்களில் விண்ணப்பங்கள் வந்திருக்கும் நிலையில், சென்னை மாநிலக் கல்லூரிக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பம் வரப்பெற்றிருக்கது முக்கியத்துவம் பெறுகிறது.
நந்தனத்தில் அமைந்துள்ள அரசு கலை ஆண்கள் கல்லூரிக்கு சுமார் 20 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இங்கு மொத்த மாணவர் சேர்க்கை 1,132 ஆகும். இதில், பிஎஸ்சி கணினி அறிவியல் பாடத்துக்கு மட்டும் அதிகபட்சமாக 5 ஆயிரம் விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. அதுபோல பிஏ, பிபிஏ படிப்புகளுக்கும் அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளன.
ராணி மேரிக் கல்லூரியில் இந்த ஆண்டு பி.காம் படிப்புக்கு அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளன. பிஎஸ்சி வேதியியல் படிப்புக்கும் விண்ணப்பங்கள் அதிகரித்திருப்பது வரவேற்கத்தக்கதாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. சில கல்லூரிகளில் ஜூன் முதல் வாரத்தில் பொது கலந்தாய்வு தொடங்குகிறது.
தமிழகத்தில் உள்ள பெரும்பலான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மே 30 முதல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வைத் தொடங்கவிருக்கின்றன.
ஜூன் மாதம் இறுதிவரை கலந்தாய்வு நடத்தி முடிக்கப்படும் நிலையில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் ஜூலை 3ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.