இன்று நாள் எப்படி? சென்னை மக்களுக்கு ஓரளவுக்குத் தெரிந்திருக்கும்

இன்று நாள் எப்படி இருக்கப்போகிறது என்பதை வானிலைதான் சொல்ல வேண்டுமா என்ன?
இன்று நாள் எப்படி? சென்னை மக்களுக்கு ஓரளவுக்குத் தெரிந்திருக்கும்
Published on
Updated on
1 min read

சென்னையில் இன்றைய நாள் எப்படி அமையப்போகிறது என்பது, ஓரளவுக்கு மக்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். இதனை வானிலை ஆய்வு மையங்கள்தான் சொல்ல வேண்டும் என்றில்லை என்ற நிலைதான் இன்று நிலவுகிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஒரு சில நாள்களாகவே கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது.

இந்த நிலையில், வேலூர் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று கடுமையான வெப்பம் நிலவக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பதிவிட்டிருப்பதாவது, வேலூர் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று கடுமையான வெப்பம் நிலவக்கூடும். இன்று காலை 11 மணிக்கெல்லாம் 40 டிகிரி வெப்பம் கடந்துவிட்டது, இதுவரை நுங்கம்பாக்கத்துக்கு மட்டும் கடற்காற்று வந்துள்ளது.

மீனம்பாக்கத்தில் 42 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவாகிவிட்டது. இங்கு இன்னும் ஒரு மணி நேரத்துக்குப் பிறகுதான் கடற்காற்று நுழையும். திருத்தணியில் 43 டிகிரி செல்சியஸ் மற்றும் வேலூரில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பமும் 11 மணிக்கெல்லாம் தொட்டுவிட்டது என்று பதிவிட்டுள்ளார்.

என்ன சொல்லியிருக்கிறது வானிலை மையம்?

வெள்ளிக்கிழமை (மே 31) தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். அதை தொடா்ந்து, ஜூன் 1 முதல் ஜூன் 3 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையும்.

நேற்று 18 இடங்களில் சுட்டெரித்த வெயில்

தமிழகத்தில் வியாழக்கிழமை திருத்தணி, சென்னை உள்பட 18 இடங்களில் வெப்ப நிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து சுட்டெரித்தது.

தமிழகத்தில் வியாழக்கிழமை நிலவரப்படி, அதிகபட்சமாக திருத்தணியில் 108.5 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. பிறபகுதிகள் பதிவான வெயில் அளவு: மீனம்பாக்கம் (சென்னை) - 107.42, வேலூா் - 106.7, மதுரை விமாநிலையம் - 104.36, நுங்கம்பாக்கம் (சென்னை) - 104.18, பரங்கிப்பேட்டை, புதுச்சேரி - தலா 104.18, மதுரை நகரம் - 104, ஈரோடு - 103.64, நாகப்பட்டினம் - 103.46, கடலூா் - 103.28, திருச்சி - 102.38, தஞ்சாவூா் - 102.2, தொண்டி - 101.12, திருப்பத்தூா் - 100.76, காரைக்கால் - 100.58, பரமத்திவேலூா், வேலூா் - தலா 100.4 டிகிரி வரை வெப்பம் பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com