புதிது புதிதாக கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும் என்று பேசி வருகிறார்கள் என முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
கொளத்தூர் தொகுதியில் ரூ. 2.85 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட முதல்வர் படைப்பகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(திங்கள்கிழமை) திறந்துவைத்தார்.
இந்த படைப்பகத்தில் படிப்பு தளம், கோ ஒர்க்கிங் ஸ்டேஷன் எனும் பணியாற்றும் தளம், உணவுத்தளம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. ஒரே நேரத்தில் 51 பேர் படிக்கின்ற அளவுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. படிப்பிற்குத் தேவையான புத்தகங்களை கொண்ட ஒரு நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... மட்டையா, மரக்கலமா, விஜய்யின் த.வெ.க.?
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின்,
'புதிது புதிதாக கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும் என்று பேசி வருகிறார்கள். திமுக ஆட்சியின் 4 ஆண்டு கால சாதனைகளை அவர்கள் ஒரு கணம் எண்ணிப்பார்க்க வேண்டும். எனவே அவர்கள் பேசுவதை பற்றியெல்லாம் எங்களுக்கு கவலை இல்லை.
தேவையில்லாமல் அவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அண்ணா பாணியில் சொல்கிறேன்.. 'வாழ்க வசவாளர்கள்'.
ஒடுக்கப்பட்ட மாணவ, மாணவிகளின் கனவைச் சிதைக்கிறது நீட் தேர்வு. நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த குரலுக்கு மத்திய அரசு ஒருநாள் பணியத்தான் போகிறது. இன்று இல்லாவிட்டால் நாளை பணியும். அந்த நம்பிக்கை இருக்கிறது' என்று பேசினார்.
முன்னதாக 'தொழில் துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. திராவிட மாடல் அரசின் செயலால் தொழில் முனைவோர் தமிழகத்தை நோக்கி ஆர்வமுடன் வருகின்றனர். அனிதா அச்சீவர்ஸ் அகாதெமி போல திமுக அரசு அச்சீவ் செய்யும் அரசாக செயல்படுகிறது' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.