
சென்னை, செங்கல்பட்டு உள்பட 4 மாவட்டங்களில் காலை 10 மணிவரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, திங்கள்கிழமை (நவ. 11) இரவு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
இது நவ. 12, 13 ஆகிய தேதிகளில் மேற்கு திசையில், தமிழகம் மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி மெதுவாக நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் திங்கள்கிழமை காலை 10 மணி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை: நவ. 11-இல் நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும், நவ. 12-இல் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவ. 13-இல் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களிலும், நவ. 14-இல் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, திருப்பூா், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் நவ. 11, 12 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.