தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்! நோயாளிகள் அவதி!

கிண்டி மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் குத்தியதற்கு கண்டனம் தெரிவித்து ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்.
மருத்துவர்கள் போராட்டம்
மருத்துவர்கள் போராட்டம்கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

மருத்துவா் மீதான கத்திக் குத்து தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவா்கள் இன்று(நவ.14) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் சிகிச்சைப் பெற முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவர் பாலாஜி மீது புதன்கிழமை கத்திக்குத்து சம்பவம் நடந்த நிலையில், அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.

மருத்துவர் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து விவகாரத்தைக் கண்டித்தும் பணியில் உள்ள மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறியும், அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவப் பிரதிநிதிகளுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடத்திய பேச்சுவார்த்தையில் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.

இதையடுத்து, காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக அனைத்து மருத்துவ சங்கங்களும் தெரிவித்தனர்.

இருப்பினும், மருத்துவா் மீது முன்னெடுக்கப்பட்ட கடுமையான தாக்குதலை கண்டிப்பதற்காகவும், குற்றவாளிகளை அரசு கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பதற்காகவும், வருங்காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதற்காகவும் ஒருநாள் கவன ஈர்ப்பு வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படுவதாக மருத்துவச் சங்க நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், புறநோயாளிகள் பிரிவு, அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைகள், பிற சிகிச்சைகள், மருத்துவ மாணவா்களுக்கான வகுப்புகள் ஆகியவை தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்று நிறுத்தப்பட்டுள்ளது. அவசர சிகிச்சைப் பிரிவு மட்டும் தொடர்ந்து செயல்படுகிறது.

அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் சிகிச்சைப் பெற முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com