-ரோஸ் ரேச்சல்
சர்க்கரை நோய் உலக மக்கள் அனுபவிக்கும் மிகப்பெரிய பிரச்னைகளில் ஒன்றாக மாறியுள்ளது. வயது வித்தியாசம் பாராமல் இது நாளுக்குநாள் அதிகரித்து வருவதுதான் நீங்காத சோகம்.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உலகம் முழுக்க உள்ளனர். இந்தியாவில் மட்டும் 7.7 கோடி மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சர்க்கரை நோய்க்கு காரணம்
இந்தியாவில் 30 - 50 ஆண்டுகளுக்கு முன்புவரையில், இந்த அளவுக்கு சர்க்கரை நோய் கண்டறியப்படவில்லை. ஆனால், தற்போது ஆண்டுக்கு ஒரு கோடி (10 மில்லியன்) மக்களுக்கு சர்க்கரை நோய் கண்டறியப்படுகிறது.
சர்க்கரை நோய் என்றாலே நகரத்தில் வாழும் மக்களுக்கு வரும் என்ற நிலை மாறி, கிராமப்புறங்களிலும் பலர் சக்கரை நோயால் தற்போது அவதியுறுகின்றனர்.
உடல் உழைப்பு குறைந்தது இதற்கு முக்கிய காரணமாகக் கூறலாம்; சிறுவயதுடையவர்களும் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவதைப் பார்க்க முடிகிறது.
முன்பு உடல் உழைப்பு அதிகம் இருந்தது; குழந்தைகள் வீட்டில் ஓடி, ஆடி விளையாடுவது வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது பள்ளி சென்று வந்தால், அழுத்தமாக உணரும் மாணவர்கள் ஸ்மார்ட்போன் அல்லது டேப் (Tab) எடுத்துக்கொண்டு விளையாடுவதே வாடிக்கையாகிவிட்டது.
வீட்டருகே பூங்கா இருந்தாலும் அதில் சென்று விளையாடக்கூட குழந்தைகள் விரும்புவதில்லை. நொறுக்குத்தீனி அதிகரிப்பதும் சர்க்கரை நோய் அதிகரிக்க முக்கிய காரணமாகக் கூறலாம்.
சர்க்கரை நோய் என்றால் என்ன?
உணவு எடுக்கும்போது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கிறது. இதனைச் சமப்படுத்த கணையத்திலிருந்து இன்சுலீன் சுரக்கிறது. இன்சுலீன் சுரந்து, உடலில் சர்க்கரை அதிகரிக்கும்போது, அதன் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இவ்வாறு கணையத்தில் போதுமான அளவு இன்சுலீன் சுரக்காமல் இருப்பது, உடலில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கிறது. இதுவே சர்க்கரை நோயாகிறது.
இந்த சர்க்கரை நோயை இரு வகைகளாகப் பிரிக்கலாம்.
முதல் வகை
5 முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கு கண்டறியப்படுவது. சில குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சலாலோ, நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாலோ கணையம் முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கும். கணையம் பாதிக்கப்பட்டிருப்பதால் இன்சுலீன் சுரக்காது. இதனால் உடலில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும். இவர்களுக்கு வாழ்நாள் முழுக்க இன்சுலீன் சுரக்காததால், சிகிச்சை மூலம் இன்சுலீன் கொடுத்து அவர்களின் வாழ்க்கையைச் சமநிலைப்படுத்தலாம்.
இரண்டாம் வகை
மத்திய வயதுடையவர்களுக்கு சர்க்கரை நோயைக் கண்டறிவது இரண்டாம் வகையைச் சேரும்; குறிப்பாக, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு. இவர்களுக்கு இன்சுலீன் சுரக்காமல் இல்லை; உடல் உழைப்பின்மையால் போதுமான அளவு இன்சுலீன் சுரப்பதில்லை. சுரக்கும் குறைந்த அளவு இன்சுலீனும் ரத்தத்தில் கலந்து சரியாகச் சென்று வேலைசெய்வதில்லை. நாளடைவில், சுரக்கும் குறைந்தபட்ச இன்சுலீனும், ஆரோக்கியமற்ற உணவு முறையால் முற்றிலும் சுரக்காமல் போய்விடும். இவ்வாறானவர்களுக்கு நாம் இன்சுலீன் கொடுத்து சிகிச்சை அளிக்கிறோம்.
இந்த இரண்டு வகை இல்லாமல் மூன்றாவதாக ஜிடிஎம் டையபட்டீஸ் (Gestational Diabetes Mellitus - GDM) என்று ஒன்று உண்டு.
இந்த வகை சர்க்கரை நோய், பெண்கள் கருவுற்றிருக்கும்போது பொதுவாக கண்டறியப்படுகிறது. குழந்தை வளர்ச்சிக்கு ஏற்ப, உடலில் குளூக்கோஸ் அளவு அதிகரிக்கிறது. இதற்கு ஏற்ப தாயின் உடலில் இன்சுலீன் சுரக்காததால் குளூக்கோஸ் அளவு அதிகரித்து சர்க்கரை நோய் கண்டறியப்படுகிறது.
பேறுகாலத்துக்குப் பிறகு சர்க்கரை அளவு கட்டுக்குள் வர வாய்ப்புள்ளது. சிலருக்கு கணையத்தில் இன்சுலீன் சுரப்பது மந்தமாகி, இரண்டாவது வகை சர்க்கரை நோயாளிகள் வகையில் சேருவார்கள்.
2ஆம் வகை சர்க்கரை நோயால்தான் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் 7.7 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் 10% மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சர்க்கரை நோய் அறிகுறிகள்
உடல் எடை குறைதல்
அதிகப்படியான பசி
அதிகப்படியான தாகம்
உடல் சோர்வாக இருப்பது
அதிகமுறை சிறுநீர் கழிப்பது
சிறுநீர் தொற்று
மறதி அதிகமாவது
வெள்ளைப்படுதல்
அடிவயிற்றில் வலி
மூட்டுகளில் வலி, உடலில் ஊசி குத்துவதைப் போன்று உணர்வது
மத்திய வயதுடைய பலர் இந்த அறிகுறிகளுடன் இருப்பதாகக் கூறுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு சர்க்கரை நோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சர்க்கரை நோயை உறுதிப்படுத்துவது எப்படி?
சர்க்கரை நோயை உறுதிப்படுத்த 3 வகையான ரத்தப் பரிசோதனைகள் உள்ளன.
பொதுவான ரத்தப் பரிசோதனையின்போது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 140-க்கு கீழ் இருக்க வேண்டும். (140 mg / dl) 140 - 200 இருக்கிறது என்றால் ஆரம்பக்கட்டத்தில் இருப்பதாக பொருள். 200க்கு மேல் இருந்தால் சர்க்கரை நோய் இருப்பது உறுதி.
இதில் உணவுக்குப் பிறகு சர்க்கரை அளவு அதிகமாக உள்ளதா? சாப்பிடுவதற்கு முன்பு அதிகமுள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.
சர்க்கரை நோயானது சமீபத்தில் வந்துள்ளதா? நீண்டகாலமாக உள்ளதா? என்பதை அறிந்துகொள்ள வேண்டும். இதற்கு 3 விதமான பரிசோதனைகள் உள்ளன.
முதல் பரிசோதனை
காலையில் உணவு உட்கொள்ளாமல் வெறும் வயிற்றில் ரத்தம் எடுத்து பரிசோதிப்பது.
பரிசோதனை மேற்கொள்வதற்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்கு உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். காலையில் (7 - 8 மணி) வெறும் வயிற்றில் பரிசோதனைக்கு ரத்தம் கொடுக்க வேண்டும். இந்தப் பரிசோதனையில் 100க்கும் குறைவாக இருந்தால் சர்க்கரை நோய் இல்லை. 100 - 125 இருந்தால் சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை. 125க்கு மேல் இருந்தால் சர்க்கரை நோய் இருப்பது உறுதியாகிறது.
இரண்டாவது பரிசோதனை
காலை உணவுக்குப் பிறகு 2 மணிநேரம் கழித்து மீண்டும் ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். இதில் 140க்கு கீழ் இருந்தால் சர்க்கரை நோய் இல்லை. 140 - 200 என்றால் சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை. 200க்கு மேல் இருந்தால் சர்க்கரை நோய் இருப்பது உறுதியாகிறது.
மூன்றாவது பரிசோதனை
3 மாத சராசரியில் மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் ஹீமோகுளோபின் அளவு 5.7க்கு கீழ் இருக்க வேண்டும், அவ்வாறு இருந்தால் சர்க்கரை நோய் இல்லை. 5.7 - 6.5 இருந்தால் சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை. மாறாக 6.5க்கு அதிகமாக இருந்தால் சர்க்கரை நோய் இருப்பது உறுதியாகிறது.
இவ்வாறு இருப்பவர்கள் சர்க்கரை நோய் அல்லது பொதுமருத்துவரை அணுகி அதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், அதற்கேற்ப உணவு முறைகளையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.
சர்க்கரைக்கு முந்தைய நிலையில் இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?
சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் இருப்பவர்கள் 3 - 6 மாதங்களுக்கு ஒருமுறை சர்க்கரை அளவை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இந்தக் காலகட்டத்தில் இருப்பவர்கள் சராசரியான உணவை எடுத்துக்கொள்ளக் கூடாது. மாறாக, சர்க்கரை நோயாளி எடுத்துக்கொள்ளும் உணவு முறைகளையே கடைபிடிக்க வேண்டும். இதோடு உடற்பயிற்சி செய்தால் சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் எந்தவித மாற்றமும் இன்றி தொடரலாம்.
கட்டுரையாளர்:
சர்க்கரை மற்றும் பொது மருத்துவ நிபுணர்