சென்னையில் நூற்றுக்கணக்கான பேருந்து நிறுத்தங்களை இடம் மாற்ற திட்டம்! ஏன்?

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, சென்னையில் நூற்றுக்கணக்கான பேருந்து நிறுத்தங்களை இடம் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
பேருந்து நிறுத்தம்
பேருந்து நிறுத்தம்EPS
Published on
Updated on
1 min read

சென்னையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான தீர்வுகளை போக்குவரத்துக் காவல்துறையினர் ஆராய்ந்து, அதனை சோதனை முறையில் செயல்படுத்தி, வெற்றி பெற்றால் செயல்படுத்தியும் வருகிறார்கள்.

அதன் முன்னோடியாக, சென்னையை அடுத்த அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே இருக்கும் சிக்னலில் பல மணி நேரம் வாகனங்கள் காத்திருக்கும் நிலை இருந்தது. இதனால் வாகன ஓட்டிகளை விடவும், சாலையில் நடந்து செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், அம்பத்தூர் தொழிற்பேட்டை சிக்னல் இருந்த இடம் மூடப்பட்டு, பாடி நோக்கி செல்லும் வாகனங்களுடனே ஆவின் செல்ல வேண்டிய வாகனங்களும் சென்று, ஓரிடத்தில் யு டர்ன் செய்து வரும் வகையிலும், அம்பத்தூர் நோக்கி செல்லும் வாகனங்களுடனே சென்று தொழிற்பேட்டைக்குள் நுழைய வேண்டிய வாகனங்களும் சென்று சற்று தொலைவில் இருக்கும் யு டர்ன் வழியில் திரும்பி வரும் வகையில் மாற்றப்பட்டு, தற்போது ஓரளவுக்கு போக்குவரத்து நெரிசல் சரி செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், சென்னை மாநகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலுக்குக் காரணமாக இருக்கும் பேருந்து நிறுத்தங்களை மாற்றுவதற்கான வழிகள் ஆராயப்பட்டு வருவதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

சிக்னல், மேம்பாலங்கள் அருகேயுள்ள பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தொலைவுக்கு தள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பேருந்து நிறுத்தங்களை இடம் மாற்றுவது குறித்து மாநகரப் போக்குவரத்துக் கழகம் ஆய்வுப் பணிகளைத் தொடங்கியிருக்கிறது.

இதன் மூலம், பல முக்கிய சாலைகளில், மாநகரப் பேருந்துகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைந்து, போக்குவரத்து சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சென்னையில், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பேருந்து நிறுத்தங்கள் இடம் மாற்றப்படவில்லை என்றும், சீரான இடைவெளியில், போக்குவரத்தை எளிதாக்க, பேருந்து நிறுத்தங்கள் மாற்றப்பட வேண்டும் என்று அதிகாரிகள் கூறியிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆய்வுப் பணிகளை முடித்து, பரிசீலனை செய்து, நூற்றுக்கணக்கான பேருந்து நிறுத்தங்கள் மாற்றப்படும் என்றும், சென்னை மாநகராட்சி மூலமாகவே, பேருந்து நிறுத்தங்களை இடம் மாற்ற முடியும் என்றும் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம், விரைவில், பேருந்து நிறுத்தங்கள் இடம் மாற்றப்படும் என்றும், இது பேருந்துப் பயணிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

முதற்கட்டமாக பாரிமுனை - முகப்பேர், வடபழனி - தரமணி இடையேயான வழித்தடங்களில் உள்ள பேருந்து நிறுத்தங்கள் ஆய்வு செய்யப்படும் என்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com