திமுகதான் ஆள வேண்டும் என மக்கள் நம்பிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின்
இனி எந்நாளும் திமுகதான் தமிழ்நாட்டை ஆளும், ஆள வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் நம்பிக்கையுடன் சொல்லி வருகிறார்கள்.


கடந்த அதிமுக ஆட்சியானது அனைத்து வகையிலும் தமிழ்நாட்டைப் பாழ்படுத்தியிருந்த நிலையை, சீர் செய்தது மட்டுமல்லாமல், மகளிருக்குக் கட்டணமில்லா விடியல் பேருந்து பயணம் - மகளிருக்கு மாதம்தோறும் ஆயிரம், புதுமைப் பெண் - தமிழ்ப் புதல்வன் - நான் முதல்வன் - மக்களைத் தேடி மருத்துவம் என இந்தியாவுக்கே முன்மாதிரியான முத்திரை பதிக்கும் திட்டங்களை நிறைவேற்றித் தந்து தமிழ்நாட்டை சிறப்புமிகு மாநிலமாக உயர்த்திக் காட்டி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
மேலும், மாவட்டரீதியாக கழகப் பணிகளையும் மாவட்டம்தோறும் நேரில் சென்று ஆய்வு என ஒரே நேரத்தில் ஆட்சிப் பணியையும், கட்சிப் பணியையும் செவ்வனே செய்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.
மத்திய அரசுக்குக் கண்டனம்
தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளைப் புறந்தள்ளி இந்தி மாதம் - வாரம் என விழா எடுப்பது, நாடு முழுவதும் வலியுறுத்தப்பட்டு வரும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்ளாமல் காலந்தாழ்த்துவது, வக்ப் வாரிய திருத்தச் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல், மக்கள் உயிரைப் பறிக்கும் தொடர் ரயில் விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்காதது, மாநில அரசுக்கு வரவேண்டிய நிதியை விடுவிக்காமல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைப் பாதிப்புக்குள்ளாக்குவது, அரசியல் சட்டம் அளித்துள்ள மாநிலங்களுக்கான அதிகாரங்களையும் அபகரிப்பது, அவசர கதியில் கொண்டு வந்த மூன்று குற்றவியல் சட்டங்கள், நிதி ஒதுக்கீட்டில் - பேரிடர் நிதி வழங்குவதில் பாஜக அல்லாத மாநில அரசுகளிடம் காட்டும் பாராமுகம், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கைகள் போன்ற மத்திய பாஜக அரசின் ஜனநாயக விரோத - மக்கள் விரோத - அரசியல் சட்டவிரோதச் செயல்பாடுகளுக்கு இந்த உயர்நிலைச் செயல்திட்டக் குழுக் கூட்டம் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.
மீனவர்கள் நலன்களைக் காப்பீர்!
இலங்கையில் செப்டம்பர் மாதம் அதிபர் தேர்தலும், இந்த மாதம் நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெற்று அதிபர் அனுர குமார திசநாயக தலைமையிலான புதிய அரசு, தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.
மணிப்பூர் தீயை அணைப்பீர்!
கடந்த 18 மாதங்களாக மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது. மனித உரிமைகள் பறிக்கப்பட்டு - மனித நேயம் நசுக்கப்பட்டு - மனித பெருந்துயரமே அம்மாநிலத்தை ஆட்டிப் படைக்கிறது. எங்கு பார்த்தாலும் போராட்டம், வன்முறை, தீ வைப்பு, மக்கள் பிரதிநிதிகள் மீது தாக்குதல், கலவரம் எனச் சட்டம்- ஒழுங்கும் பொது அமைதியும் வரலாறுகாணாத வகையில் சீர்குலைந்து சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது.
இனியும் வேடிக்கை பார்க்காமல் - மணிப்பூர் மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்து - மனிதநேயம் உயிர்பெற மத்திய பாஜக அரசு - குறிப்பாக, பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தனிக்கவனம் செலுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
நிதி உரிமையை நிலை நிறுத்துக!
மாநிலங்களின் அதிகாரத்திற்காகக் குரல் கொடுத்த முதல் இயக்கம் திமுக. அந்த வழியில் நின்று தற்போது 16-ஆவது நிதிக் குழுவிடம் மாநில நிதி உரிமைக்காக ஆட்சி சார்பிலும், கட்சி சார்பிலும் வலுவான வாதங்களை எடுத்துவைத்துள்ள கழகத் தலைவர் மற்றும் முதல்வருக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் கோரிக்கைகள் 16-ஆவது நிதிக்குழுவின் அறிக்கையில் முழுமையாக இடம்பெற வேண்டும் என்றும், அதனை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராவோம்.
தமிழ்நாட்டை உயர்த்தவும், அகில இந்தியா முழுமைக்கும் கூட்டாட்சி அரசை மலர வைக்கவும் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்ட திமுக பவள விழாவைக் கண்டு கம்பீரமாக வளர்ந்து வருகிறது. ஐந்து முறை தமிழ்நாட்டை ஆண்ட கழகத்துக்கு ஆறாவது முறையாக ஆட்சி செய்யும் வாய்ப்பைத் தமிழ்நாட்டு மக்கள் வழங்கினார்கள்.
தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியும், சொல்லாத பல திட்டங்களை நிறைவேற்றியும் வளமான தமிழ்நாட்டைக் கழக அரசு உருவாக்கி வருகிறது. இனி எந்நாளும் திமுகதான் தமிழ்நாட்டை ஆளும், ஆளவேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் நம்பிக்கையுடன் சொல்லி வருகிறார்கள். பயனடைந்தவர் சொல்லும் பாராட்டும், பயனாளிகளின் மனநிறைவும் சேர்ந்து 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சியை மீண்டும் மலர வைக்கும் என்பதில் அய்யமில்லை.
இந்நிலையில் கழக அரசின் சாதனைகள் - திட்டங்கள் - முதல்வரின் அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாடுகள், தொலைநோக்குப் பார்வைகள் அனைத்தையும் மக்களுக்கு நினைவூட்டுவதன் மூலமாகத் தேர்தல் பரப்புரையை இப்போதே தொடங்குங்கள் என்று கழக உடன்பிறப்புகள் அனைவரையும் இந்த உயர்நிலைச் செயல்திட்டக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...