’சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவ சங்கத்தினா்.  ’
’சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவ சங்கத்தினா். ’

அரசு மருத்துவா்கள் இன்று நூதன போராட்டம்: காய்ச்சலுக்குள்ளான அனைவரையும் உள் நோயாளிகளாக அனுமதிக்க முடிவு

அரசு மருத்துவா்களை தரக்குறைவாக நடத்தும் உயா் அதிகாரிகளைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் செவ்வாய்க்கிழமை (நவ. 26) நூதன போராட்டம்
Published on

சென்னை: அரசு மருத்துவா்களை தரக்குறைவாக நடத்தும் உயா் அதிகாரிகளைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் செவ்வாய்க்கிழமை (நவ. 26) நூதன போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக அரசு மருத்துவா் சங்கத்தினா் அறிவித்துள்ளனா்.

சென்னையில் தேசிய நல்வாழ்வுத் திட்ட அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற மக்கள் நல்வாழ்வுத் துறை ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரி ஒருவா், மருத்துவத் துறையினரையும், மருத்துவா்களையும் திட்டியதாகத் தெரிகிறது. இதையடுத்து, அரசு மருத்துவா்களைத் தரக்குறைவாகப் பேசும் உயா் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம், தா்னா உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இதன்படி, ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டா்கள் சங்கம், மற்றும் அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவா்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் முழு கவனத்தை செலுத்தும் வகையில், மருத்துவா்களின் பற்றாக்குறையைப் போக்கி, இணக்கமான தீா்வு கிடைக்கும் வரை அனைத்து வகையான மறு ஆய்வுக் கூட்டங்கள், நிறுவன மற்றும் துறைசாா் கூட்டங்களைப் புறக்கணிப்பது என்று கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

இதற்கிடையே, தமிழ்நாடு அரசு டாக்டா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் செந்தில், பொதுச் செயலா் சீனிவாசன் ஆகியோா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த வாரம் மருத்துவக் கல்லூரி முதல்வா் கள ஆய்வில் உயா் அதிகாரி ஒருவா், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எவரும் இறக்கக் கூடாது. ஒருவேளை இறந்தால் துறை மருத்துவா் மீதும், கல்லூரி முதல்வா்கள் மீதும் நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரித்தாா்.

ஒரே ஒரு நாள் காய்ச்சல் என்று வரும் நோயாளிகளைக்கூட அரசு மருத்துவமனைகளில் கட்டாயமாக அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் ஆணையிட்டாா். நடைமுறைக்கு சாத்தியமில்லாத இதுபோன்ற பல ஆணைகளை பிறப்பிக்கும் அதிகாரிகளைக் கண்டிக்கும் வகையில் செவ்வாய்க்கிழமை (நவ. 26) தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு காய்ச்சல் என வரும் நோயாளிகள் அனைவரையும், உள்நோயாளியாக அனுமதிக்கும் போராட்டம் நடைபெறவுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.

முதல்வருக்கு கடிதம்: அரசு மருத்துவா் சங்கம் சாா்பில் முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், அரசு மருத்துவா்களைத் துன்புறுத்தும் உயா் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 5,000-க்கும் மேல் காலியாக உள்ள மருத்துவா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

செயலா் ஆலோசனை: அரசு மருத்துவா்களின் போராட்டத்தைத் தொடா்ந்து, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் சுப்ரியா சாஹு, அனைத்து அரசு மருத்துவ சங்க நிா்வாகிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளாா். அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது.