
தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் ரூ.27.34 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட 7 சுற்றுலாத் தலங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இது குறித்து தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (26.11.2024) தலைமைச் செயலகத்தில், சுற்றுலாத் துறை சார்பில் ஒகேனக்கல் அருவிப் பகுதிகள், கொல்லி மலை, ஆண்டிபாளையம் ஏரி, வத்தல்மலை, முட்டம் கடற்கரை, அந்தியூர் ஏரி, மன்னார்குடி – ஹரித்ராநதி கோயில் குளம் ஆகியவை 27 கோடியே 34 இலட்சத்து 62 ஆயிரம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டில் பல்வகையான சுற்றுலாத் தலங்கள், பழம்பெரும் திருக்கோயில்கள், இயற்கை எழில் கொஞ்சும் மலை மற்றும் வனப்பகுதிகள், அழகிய கடற்கரைகள் போன்ற பல்வேறு சுற்றுலா தலங்கள் பலதரப்பட்ட சுற்றுலாப் பயணிகளையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. இத்தகைய பெரும் வாய்ப்புகள் அடங்கிய சுற்றுலாத்துறையை மேம்படுத்திட தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, சுற்றுலாத் துறையின் 2021-22, 2022-23 மற்றும் 2023-24 ஆகிய ஆண்டுகளுக்கான மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை செயல்படுத்திடும் வகையில், தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவிப் பகுதிகளை முழுமையான சுற்றுலாத் தலமாக மேம்படுத்திட 17 கோடியே 57 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவில் நுழைவுவாயில் வளைவு, கழிப்பறைகள், நுழைவுச் சீட்டு வழங்குமிடம், உணவகம், படகு தளம், பார்வை மேடை, மசாஜ் செய்யும் இடம், குளியலறைகள், உடை மாற்றும் அறைகள், ஆழ்துளை கிணறு போன்ற முடிவுற்ற மேம்பாட்டுப் பணிகள்;
வத்தல்மலைப் பகுதியில் 2.23 கோடி ரூபாய் செலவில் நில சீரமைப்பு, வாகன நிறுத்துமிடம், நுழைவு வாயில் வளைவு, உணவகம், வரவேற்பறை, ஆழ்துளை கிணறு போன்ற முடிவுற்ற மேம்பாட்டுப் பணிகள்; நாமக்கல் மாவட்டம், கொல்லி மலையை முக்கிய சுற்றுலாத் தலமாக மேம்படுத்திடும் வகையில் 2.22 கோடி ரூபாய் செலவில் நுழைவுவாயில் வளைவு, வாகன நிறுத்துமிடம், நடைபாதை, கழிப்பறைகள், சாகச மற்றும் சுற்றுலா வசதிகள் போன்ற முடிவுற்ற மேம்பாட்டுப் பணிகள்; திருப்பூர் மாவட்டம், ஆண்டிபாளையம் ஏரியில் 1.47 கோடி ரூபாய் செலவில் நிலசீரமைப்பு, சாலை மற்றும் நடைபாதை, மின்சாரப் பணிகள், கண்காணிப்பு கேமிராக்கள் போன்ற முடிவுற்ற மேம்பாட்டுப் பணிகள்; கன்னியாகுமரி மாவட்டம், முட்டம் கடற்கரையில் 2.84 கோடி ரூபாய் செலவில் பார்வையாளர்கள் மாடம், குழந்தைகள் விளையாடுமிடம், சென்ட்ரல் பிளாசா, நுழைவுச்சீட்டு வழங்குமிடம், தகவல் பலகை, சிற்பங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் போன்ற முடிவுற்ற மேம்பாட்டுப் பணிகள்;
ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஏரியை சுற்றுலாத் தலமாக மேம்படுத்திட ரூ.50 இலட்சம் செலவில் மேம்படுத்தப்பட்ட நடைபாதை, நிலச்சீரமைப்பு, படகுதளம், ஆழ்துளை கிணறு, மின்சாரப் பணிகள் போன்ற முடிவுற்ற மேம்பாட்டுப் பணிகள்;
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, ஹரித்ராநதி கோயில் குளத்தை மேம்படுத்திட 50 இலட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட நடைபாதை, நிலச்சீரமைப்பு, படகுதளம், ஆழ்துளை கிணறு போன்ற முடிவுற்ற மேம்பாட்டுப் பணிகள்; என மொத்தம் 27.34 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட சுற்றுலாத் தலங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின், சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.