சென்னை: வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்னும் ஒரு சில மணி நேரங்களில் புயலாக மாறுகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான புயல் சின்னமானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே நீண்டநேரமாக நீடித்து வரும் நிலையில், இன்னும் ஒரு சில மணி நேரங்களில் பெங்ஜால் புயலாக உருவாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த ஒரு சில மணி நேரங்களில் புயலாக வலுப்பெறக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த புயலானது வடமேற்காக நகர்ந்து நாளை பிற்பகல் காரைக்காலுக்கும் மாமல்லபுரத்துக்கும் புதுவைக்கு அருகே கரையைக் கடக்கக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் பரவலாக மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கன முதல் மிகக் கனமழையும் பெய்யக்கூடும்.
இந்த புயலானது கரையைக் கடக்கும்போது காற்றானது மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் அவ்வப்போது 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். வங்கக் கடலில் உருவாகவிருக்கும் புயல் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தகவல்கள் தெரிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.