
பொதுமக்களுக்கு வானிலை முன்னெச்சரிக்கை வழங்கும் TN-Alert கைப்பேசி செயலியினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இன்று (அக். 3) வெளியிட்டார்
முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பிற்கிணங்க பொதுமக்களுக்கு வானிலை முன்னெச்சரிக்கை வழங்கும் TN-Alert கைப்பேசி செயலியினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இன்று (அக். 3) வெளியிட்டார்.
முதல்வர் ஸ்டாலின் 30.09.2024 அன்று வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நடத்திய ஆய்வுக் கூட்டத்தின் போது பொதுமக்களுக்கு வானிலை முன்னெச்சரிக்கை வழங்கும் செயலி தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டுள்ளது என்று அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இன்று (அக். 3) பொதுமக்களுக்கான TN-Alert என்னும் கைப்பேசி செயலியை சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் வெளியிட்டார்.
TN-Alert செயலி, பொதுமக்கள் எளிய முறையில் இயக்கக் கூடிய வானிலை செயலியாக உள்ளது. இச்செயலியின் மூலம் தம் இருப்பிடம் சார்ந்த வானிலை மற்றும் முன்னெச்சரிக்கை செய்திகளை பொதுமக்கள் தமிழிலேயே அறிந்து கொள்ளலாம்.
இந்த செயலியில் அடுத்த நான்கு நாள்களுக்கான வானிலை முன்னறிவிப்பு, மழைமானி வாரியான தினசரி பெறப்பட்ட மழை அளவு, நீர்த்தேக்கங்களின் தற்போதைய நீர் இருப்பு விவரம், தங்களது இருப்பிடம் வெள்ள அபாயத்திற்கு உள்பட்டதா போன்ற தகவல்களை அறிந்து கொள்ளும் வசதி உள்ளது.
பேரிடர் மற்றும் கனமழையின் காரணமாக பாதிப்பிற்குள்ளாகும் மக்கள் தங்களது புகார்களை பதிவு செய்யவும், மாவட்ட நிருவாகத்தை தொடர்பு கொள்ளவும் இந்தச் செயலியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பேரிடர் குறித்த வானிலை முன்னெச்சரிக்கையினை அறிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் பொதுமக்கள் ஆயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள உதவும் TN– Alert செயலியை, Google Play Store மற்றும் IOS App Store–ல் இருந்து பதிவிறக்கம் செய்து பொதுமக்கள் பயனடையுமாறு அரசு முதன்மைச் செயலாளர்/ வருவாய் நிருவாக ஆணையர்(மு.கூ.பொ.) கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.