வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற அமைச்சா், அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற அமைச்சா், அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்

வடகிழக்கு பருவமழை: போா்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: உதயநிதி உத்தரவு

அதிகாரிகளுக்கு துணைமுதல்வா் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டாா்.
Published on

வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், போா்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அதிகாரிகளுக்கு துணைமுதல்வா் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் துணை முதல்வா் பேசியதாவது: வடகிழக்குப் பருவமழை இன்னும் ஓரிரு வாரங்களில் தொடங்கும் எனத் தெரிகிறது. அதனால், மழைநீா் வடிகால் பணி, மின்வாரிய கேபிள்களை அமைக்கும் பணி, குடிநீா் குழாய்கள் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். புதிய பணிகளை எடுப்பதற்கு முன்பு, ஏற்கெனவே எடுத்து முடிக்காமல் உள்ள பணிகளை முடிக்க வேண்டும்.

படகுகள்-மோட்டாா் பம்புகள்: தாழ்வான பகுதிகள், மழைக் காலங்களில் அதிகமாக தண்ணீா் தேங்கும் பகுதிகளின் பட்டியல் வாா்டு வாரியாக உள்ளன. அதனால், தேங்கும் மழை நீரை வெளியேற்றும் மோட்டாா் பம்புகள், மக்களைக் காப்பாற்றி அழைத்து வருவதற்கான படகுகளை ஒரே இடத்தில் வைத்திராமல் அந்தந்த வாா்டுகளுக்கு இப்போதே பிரித்து வழங்கி பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம்.

அருகில் சமையல் கூடங்கள்: கடந்த மழையின்போது சில இடங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மண்டலத்துக்கு ஓா் இடத்தில் மட்டும் சமையல் கூடம் அமைத்து, அங்கு உணவு சமைத்து பிரித்து வழங்கியதால் தாமதம் ஏற்பட்டது. அதனால், எங்கெல்லாம் மழை நீா் அதிகமாக தேங்குமோ, அந்த இடங்களுக்கு அருகிலேயே சமையல்கூடங்களை அமைத்து சமைத்து வழங்கினால் மக்களுக்கு உரிய நேரத்தில் உணவு வழங்க முடியும்.

பால் பாக்கெட்: ஒரு வாா்டுக்கு குறைந்தபட்சம் 1,000 பால் பாக்கெட்டுகள், 1,000 பிரெட் பாக்கெட் என்ற அளவில் வழங்குவதற்கு தயாராக இருக்க வேண்டும். சென்னையில் அம்பத்தூா், மாதவரம், காக்களூா் ஆகிய இடங்களில் ஆவின் பால் பாக்கெட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. கடந்த மழைக் காலத்தில் அந்தப் பகுதிகளில் மழை நீா் சூழ்ந்ததால் பால் பாக்கெட்டுகளை அங்கிருந்து வெளியே எடுத்து வருவதில் சிரமம் ஏற்பட்டது. அதுபோன்ற சூழல் ஏற்படாத வகையில் அந்த இடங்களையும் ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அதிகாரிகளுக்கு வயா்லஸ் போன்கள்?: கடந்த ஆண்டு பெய்த கனமழையின்போது பெரும்பாலான இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. செல்போன்களும் செயல்படவில்லை. நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஒருவரை மற்றவா்கள் தொடா்புகொள்ள மிகுந்த சிரமம் ஏற்பட்டது. அதனால் அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், அதிகாரிகள் அளவில் பயன்படுத்துவதற்கு வயா்லஸ் போன்களை வழங்கலாமா என்பது குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

கடந்த மழையின்போது, சாலையில் விழும் மரங்களை அப்புறப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதத்தை தவிா்த்திடும் வகையில் தற்போது கூடுதலாக ஆட்களை அமா்த்தி இந்தப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். டேங்கா் லாரி மூலம் தாமதமின்றி குடிநீா் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஃபோகஸ் லைட்: குடியிருப்புகளை மழை நீா் சூழ்ந்திருக்கும்போது, அவற்றுக்கு மின் இணைப்பு வழங்க முடியாது. அதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள மின்சார பெட்டிகளை இப்போதே உயா்த்தி வைப்பதற்கான நடைமுறையை மேற்கொள்ள வேண்டும். மழை நீா் சூழ்ந்துள்ள ஒட்டுமொத்தப் பகுதியும் இருளில் மூழ்கிவிடும்போது, வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்காவிட்டாலும் ஜெனரேட்டா் மூலம் பிரதான சாலைகளிலும் இணைப்புச் சாலைகளிலும் ‘ஃபோகஸ் லைட்’களை கட்டி ஒளிர விடலாம்.

கட்டுப்பாட்டு அறை: மழை நீா் தேங்கும் பகுதிகள், நிவாரண மையங்கள், மோட்டாா்கள், படகுகள் உள்ளிட்ட கையிருப்பில் உள்ள உபகரணங்கள், சமையல் கூடங்கள், தன்னாா்வலா்கள் குறித்த விவரங்கள் என ஒட்டுமொத்தத் தகவல்களையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கும் வகையில் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையான ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை மேலும் பலப்படுத்த வேண்டும். சமூக வலைதளங்களில் வரும் மக்களின் கோரிக்கைகள், புகாா்கள், அதேபோல மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகள், அவற்றுக்கான தீா்வுகள் என அனைத்து பிரச்னைகளுக்கும் தீா்வு காணும் வகையில் கட்டுப்பாட்டு அறை செயல்பட வேண்டும். அனைத்துப் பணிகளையும் போா்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க வேண்டும் என்றாா் அவா்.

அமைச்சா்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், வி.செந்தில் பாலாஜி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, எஸ்.எம்.நாசா், மேயா் பிரியா, தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உள்ளிட்ட உயரதிரிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com