
பூந்தமல்லியில் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ரூ.1 கோடி இழந்த இளைஞர் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பம், ஸ்ரீதேவி நகரைச் சேர்ந்தவர் வினோத்குமார் (33). இவர், தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் முகவராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி ரம்யா (28). இந்த தம்பதிக்கு 6 வயதில் மகன் உள்ளார்.
இதற்கிடையில் வினோத்குமார் பங்குச்சந்தை உள்ளிட்ட இணையதளம் மூலம் வர்த்தகத்தில் ஆரம்பத்தில் சிறிய அளவு முதலீடுகள் செய்து லாபம் ஈட்டியுள்ளார். இதையடுத்து அவர், பங்குச்சந்தையில் பல நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார்.
மேலும், வினோத்குமார் விரைவில் அதிக அளவு பணத்தை ஈட்ட வேண்டும் என்ற ஆசையில் பலரிடம் கடன் வாங்கி பங்குச்சந்தையில் ரூ.1 கோடி வரை முதலீடு செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அவருக்கு பங்குச்சந்தையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு ரூ.1 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் இவர் சில மாதங்களுக்கு முன்பு தனது சொத்துகளை விற்று கடனை அடைத்துள்ளார். இதற்கிடையில் வினோத்குமார் இழந்த சொத்துகளை மீண்டும் வாங்க வேண்டும் என்ற ஆசையில் குடும்பத்தினருக்கு தெரியாமல் பலரிடம் கடன் வாங்கி மீண்டும் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஆனாலும், அவருக்கு பங்குச்சந்தை வர்த்தகத்தில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கடன் கொடுத்தவர்கள் வினோத்குமாரிடம் பணத்தைத் திருப்பிக் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த வினோத்குமார் 2 முறை தற்கொலைக்கு முயன்றபோது, உறவினர்கள் அவரைக் காப்பாற்றியுள்ளனர்.
இந்த நிலையில் சனிக்கிழமை வினோத்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பூந்தமல்லி போலீஸார், வினோத்குமார் சடலத்தை மீட்டு, உடற்கூறு சோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புகாரின் பேரில், காவல் உதவி ஆய்வாளர் அனந்தமூர்த்தி தலைமையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.