சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்! நள்ளிரவில் பந்தல் அகற்றம், சங்க நிர்வாகிகள் கைது!

சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் பற்றி...
நள்ளிரவில் பந்தல் அகற்றம், சங்க நிர்வாகிகள் கைது.
நள்ளிரவில் பந்தல் அகற்றம், சங்க நிர்வாகிகள் கைது.
Published on
Updated on
1 min read

சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இன்று நேரில் ஆதரவளிக்கவுள்ள நிலையில், நேற்று நள்ளிரவில் வீடு புகுந்து தொழிற்சங்க நிர்வாகிகளை போலீஸ் கைது செய்துள்ளது.

மேலும், போராட்டப் பந்தல்கள் அகற்றப்பட்டு, அதிகளவிலான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா் சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவன தொழிலாளா்கள் கடந்த நான்கு வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த அமைச்சா்கள் டி.ஆா்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் ஆகியோா் அடங்கிய குழுவை முதல்வா் மு.க.ஸ்டாலின் அமைத்தாா்.

இந்தக் குழுவினா் சாம்சங் நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில், தொழிற்சங்கம் அமைப்பதைத் தவிர, மற்ற அனைத்து கோரிக்கைகளும் நிறுவனத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆனால், தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று சாம்சங் இந்தியா சிஐடியு தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

திமுக கூட்டணித் தலைவர்கள் ஆதரவு

இந்த நிலையில், சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விசிக, மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

மேலும், தொழிலாளர்களை இன்று நேரில் சந்தித்து செல்வப்பெருந்தகை, திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், வேல்முருகன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவிக்கவுள்ளனர்.

நிர்வாகிகள் கைது

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகளின் வீடுகளுக்குச் சென்ற காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மதுரை எம்பி சு.வெங்கடேசன், “தொழிற்சங்க உரிமைகேட்டு ஜனநாயக வழியில் போராடும் தொழிலாளர்கள் மீது மூர்க்கத்தனமாக காவல்துறை நடந்து கொள்வது கடும் கண்டனத்திற்குரியது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், சாம்சங் தொழிற்சாலை அருகே தொழிலாளர்கள் அமைத்த போராட்டப் பந்தலையும் காவல்துறையினர் அகற்றியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இன்று காலை சாலையில் கூடிய தொழிலாளர்கள் பேரணியாகச் சென்ற நிலையில், காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, கலைந்து செல்வதற்கு கெடு விதித்துள்ளனர்.

இதனிடையே, நேற்றிரவு தொழிற்சங்கத்தினர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஆட்கொணர்வு மனுவை சிஐடியு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com