
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, காரில் சொந்த ஊர் செல்வோர் சில வழித்தடங்களை தவிர்த்துவிடுமாறு அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அறிவுரை வழங்கியிருக்கிறார்.
தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி கொண்டாடப்படவிருப்பதை முன்னிட்டு, சென்னையிலிருந்து, காரில் சொந்த ஊர் செல்வோர், தாம்பரம்-பெருங்களத்தூர் வழியாக செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
சென்னையிலிருந்து திருப்போரூர்-செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை வழியாக செல்ல அமைச்சர் அறிவுரை வழங்கியருக்கிறார்.
தேவைக்கு ஏற்ப, தனியார் பேருந்துகளையும் தமிழக அரசு இயக்கவிருக்கிறது. இது குறித்து தனியார் பேருந்து நிறுவனங்களிடம் பேசப்பட்டு வருகிறது. தனியார் பேருந்துகளை ஏற்கனவே இயக்கி வந்த தனியார் நிறுவன ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கொண்டே இயக்கப்படும் என்பதால் பிரச்னை ஏற்படாது என்றும் அமைச்சர் உறுதி அளித்தார்.
புகார் அளிக்க
பயணிகள் வசதிக்காக 24 மணிநேர கட்டுப்பாட்டு மையம் திறப்பு. 9445014436 என்ற எண்ணில் மக்கள் தொடர்பு கொள்ளலாம்.
ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை உறுதி. மக்கள் கூடுதல் கட்டணம் குறித்து 18004256151 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 14,086 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் இன்று காலை முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பிறகு, சென்னை தலைமைச் செயலகத்தில், செய்தியாளர்களை சந்தித்த போது, சிறப்புப் பேருந்துகள் தொடர்பான அறிவிப்பை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் வெளியிட்டார்.
அவர் வெளியிட்ட தகவலில், சென்னையில் இருந்து கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்ல அக்.28 முதல் 30-ஆம் தேதி வரை 11,176 சிறப்புப் பேருந்துகள் சென்னையில் இருந்து மட்டும் பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படும்.
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம், மாதவரம் செல்ல வசதியாக 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும். பல்வேறு ஊர்களுக்கும் வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 3 நாள்களுக்கு 14,086 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பிற ஊர்களில் 2,910 பேருந்துகளும் பண்டிகைக்குப் பின் சென்னை திரும்ப வசதியாக 9,441 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தீபாவளி முடிந்து பிற ஊர்களிலிருந்து சென்னை திரும்ப 3,165 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவிருக்கின்றன
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.