கருப்பை வாய்ப் புற்றுநோய்: சென்னையில் மறுக்கப்படும் பரிசோதனை?

சென்னையில் சில பரிசோதனை மையங்களில் கருப்பை வாய்ப் புற்றுநோயை பரிசோதிக்க வரும் பெண்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
cervical cancer
கோப்புப் படம்
Published on
Updated on
3 min read

இந்தியாவில் கருப்பை வாய்ப் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுபோன்ற புற்றுநோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதால் படித்த இளம் பெண்கள் பரிசோதனைக்கு முன்வருகின்றனர். எனினும் ஊரகப் பகுதிகளில் இதுகுறித்த விழிப்புணர்வு பெரிதாக இல்லை.

கருப்பை வாய்ப் புற்றுநோய் தடுக்கக்கூடிய ஒன்று, 30 வயதிற்குள்பட்ட பெண்கள், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், 30-65 வயதுடையவர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் கட்டாயம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

அந்தவகையில், பெண்கள் பரிசோதனைக்கு வருவதை சுகாதாரத் துறை தொடர்ந்து ஊக்குவித்து வரும் சூழ்நிலையில், சென்னையில் சில பரிசோதனை மையங்களில் கருப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனைக்கு வரும் திருமணமாகாத பெண்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

பரிசோதனையில் வலி அதிகம் இருக்கும், இப்போது இந்த பரிசோதனை தேவையில்லை என்றெல்லாம்கூறி திருப்பி அனுப்பப்படுகின்றனர். சில ஆய்வகங்களில், வேறு ஆய்வகங்களுக்கு அனுப்புவதாகக் கூறி, பின்னர் தொடர்புகொள்வதே இல்லை.

அதனையும் மீறி பரிசோதனை செய்யச் சொன்னால், திருமணமானால் மட்டுமே பரிசோதனை செய்யப்படும் என்றும் திருமணம் ஆன பிறகு உங்கள் கணவரையும் அழைத்துக்கொண்டு வர அறிவுறுத்துகிறார்கள்.

இதையும் படிக்க | ரேஷன் கார்டில் பெயர் நீக்கமா? இனி இதுதான் நடைமுறை!

உடலுறவின் மூலமாகவே பெரும்பாலாக இந்த புற்றுநோய் ஏற்படும் என்று கூறப்படுவதால் 'திருமணம் ஆனால்தான் உடலுறவு' என்பதன் அடிப்படையில் சில ஆய்வகங்கள் இவ்வாறு திருமணமாகாத இளம் பெண்களை திருப்பி அனுப்புகின்றனர்.

'உடலுறவில் ஈடுபடும் எந்த வயது பெண்களுக்கும் கருப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படும். உடலுறவில் பெரிதாக ஆர்வம் காட்டாத பெண்களுக்கு இந்த வகை புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு மிகமிகக் குறைவு, பூஜ்யம் என்றே சொல்லலாம்' என மருத்துவர்கள் கூறுகின்றனர். 95% கருப்பை வாய்ப் புற்றுநோய் பாதிப்பு உடலுறவின் மூலமாகவே ஏற்படுகிறது என்கிறது தரவுகள்.

இதன் காரணமாகவே திருமணம் ஆகாத பெண்களுக்கு சென்னையில் உள்ள சில ஆய்வகங்களில் பரிசோதனை மறுக்கப்படுகிறது.

தற்போதைய உணவுப் பழக்கவழக்கங்களால் இளம் பெண்களுக்கு கருப்பையில் ஃபைப்ராய்டுகள் எனும் நார்த்திசுக் கட்டிகள், சிஸ்ட் எனும் நீர்க்கட்டிகள் உள்ளிட்ட பிரச்னைகள் இருக்கின்றன. இதனாலே தற்போது பல பெண்களுக்கு கருவுறுதலில் பிரச்னை உள்ளது. இதன் காரணமாகவும் பெண்கள் முன்கூட்டியே கருப்பை பரிசோதனைகளை செய்துகொள்கின்றனர்.

திருமணம் ஆனவர்களோ, ஆகாதவர்களோ ஒரு பெண் பரிசோதனை என்று வந்தால், ஆய்வகத்தில் பரிசோதனை செய்ய வேண்டும். அவருக்கு திருமணம் ஆகவில்லை என்பதால் பரிசோதனையை மறுப்பது இந்த காலத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதது என சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

திருமணமாத பெண்களுக்கும் கருப்பை வாய்ப் பரிசோதனை செய்ய அனைத்து ஆய்வகங்களுக்கும் சுகாதாரத் துறை அறிவுறுத்த வேண்டும், அனைத்து பெண்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர்.

இதனிடையே மருத்துவர்கள் இதுகுறித்து, 'பரிசோதனைக்கு வரும் பெண்ணிடம் நீங்கள் உடலுறவில் ஈடுபட்டுள்ளீர்களா? எனக் கேட்க முடியாத சூழ்நிலைதான் இந்த சமூகத்தில் இருக்கிறது. அதிலும் திருமணமாகாத பெண்களிடம் இதுகுறித்து பேச முடிவதில்லை, பெற்றோர்கள் அறையைவிட்டு வெளியேறிய பிறகு, சில பெண்கள் இதுகுறித்துப் பேசுகின்றனர். இதனைத் தவிர்க்கக்கூட சில ஆய்வகங்களில் திருமணமாகாத பெண்களுக்கு பரிசோதனை மறுக்கப்படலாம்' என்கின்றனர்.

மற்றொரு பிரச்னையாக, திருமணமாகாத பெண்களுக்கு அல்லது குழந்தை இல்லாதவர்களுக்கு ஹார்மோன் கருப்பை கருத்தடை சாதனங்களை (IUCD) வழங்க சில மருத்துவமனைகளே மறுக்கின்றன. இதனால் கருப்பை குழாயில் அடைப்பு ஏற்படும், கரு உருவாவதில் பிரச்னை ஏற்படும் என்று கூறி வழங்க மறுக்கின்றன.

ஆனால் உண்மையில், 'நார்த் திசுக் கட்டிகள் இருந்தால் புரோஜெஸ்ட்டிரோன் சிகிச்சை பயன் தரும். இந்த ஹார்மோன் கருத்தடை சாதனங்கள், நார்த்திசுக் கட்டிகளை சரிசெய்கிறது. மாதவிடாய் ரத்தப்போக்கு அதிகம் இருந்தால் அதனைக் குறைக்கிறது, கருப்பை நீக்கத்திற்கு மாற்றாக இருக்கிறது. புரோஜெஸ்ட்டிரோன் அளவை சரிசெய்ய வாய்வழி மாத்திரைகளைவிட இது சிறந்தது, தேவைப்படும்பட்சத்தில் இதனை எந்த நேரத்திலும் அகற்றலாம்' என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கருப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க கருத்தடை சாதனங்களை பயன்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கருப்பை வாய் புற்றுநோய்

உலக அளவில் ஆண்டுதோறும் 8 லட்சம் பெண்களுக்கு கருப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படுகிறது. இந்தியாவிலும் அதிகம் பாதிக்கப்படும் 3-வது புற்றுநோயாகவும் பெண்களில் அதிக பாதிப்புள்ள 2-வது புற்றுநோயாகவும் இருக்கிறது. இந்தியாவில் 15 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 51 கோடி பேர் இருக்கும் நிலையில் ஆண்டுக்கு 1.2 லட்சம் பேர் கருப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும் 50,000-க்கும் அதிகமானோர் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2022 ஆம் ஆண்டு உலகளவில் 6,62,301 பேர் பாதிப்பில் இந்தியாவில் 1,27,526 பேர். இறப்பு உலகளவில் 3,48,874. இந்தியாவில் 79,906. கருப்பை வாய்ப் புற்றுநோய் பாதிப்பில் சீனா முதலிடமாக இருந்தாலும் இறப்பில் இந்தியாதான் முதலிடம்.

தீவிரமாக இருந்தால் மரணத்தைக் கூட ஏற்படுத்தக் கூடிய கருப்பை வாய்ப் புற்றுநோய் குறித்த புரிதல் போதிய அளவில் இல்லை என்பதுதான் இதற்குக் காரணம்.

கருப்பை வாய்ப் புற்றுநோய்

கருப்பை வாய்ப் என்பது கா்ப்பப் பையின் கீழும், பெண்ணுறுப்பின் (யோனி) மேலேயும் அமைந்துள்ளது. பெண்ணுறுப்பில் இருந்து கா்ப்பப் பைக்குள் கிருமிகள் ஊடுருவாமல் தடுப்பதிலும், ஃபெலோபியன் டியூப் எனப்படும் கருக்குழாய்களுக்குள் விந்தணுக்கள் செல்வதற்கு வழிவகுப்பதிலும் கருப்பை வாய் அதிமுக்கியப் பங்கு வகிக்கிறது.

கருப்பை வாய்ப் புற்றுநோய் ‘ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்’ (ஹெச்பிவி) எனும் கிருமித் தொற்றினால் ஏற்படுகிறது.

காரணங்கள்: 95% பாதிப்பு உடலுறவு மூலமாகவே ஏற்படுகிறது. தொடர்ந்து உடலுறவில் ஈடுபடும் பெண்களுக்கும் அதிகமாக குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கும் ஏற்படுகிறது.

இதுதவிர கருத்தடை மாத்திரைகளைத் தொடர்ந்து பயன்படுத்துதல், புகைபிடித்தல், மது அருந்துதல், உடல் பருமன், நோய் எதிா்ப்பாற்றல் குறைவு போன்றவற்றால் ஏற்படும்.

அறிகுறிகள்: பிறப்புறுப்பில் ரத்தப்போக்கு குறிப்பாக உடலுறவுக்குப் பின் ரத்தப்போக்கு, சிறுநீர் கழிக்கும்போது ரத்தம் வெளியேறுதல், வயிற்றுப்போக்கு, எடை இழப்பு, இடுப்பு மற்றும் வயிறு வலி, ஆசனவாய் வலி.

கருப்பை வாய்ப் புற்றுநோய்கள் தடுக்கக் கூடியது என்பதால் பெண்கள் இதுகுறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.