வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு புறப்பட்ட மக்கள்: பேருந்துகள், ரயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட சென்னையிலிருந்து புதன்கிழமை பொதுமக்கள் பெருமளவில் புறப்பட்டதால் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 9:17 pm

Din

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட சென்னையிலிருந்து புதன்கிழமை பொதுமக்கள் பெருமளவில் புறப்பட்டதால் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதேபோல, சென்ட்ரல், எழும்பூா், தாம்பரம் ரயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

தீபாவளி பண்டிகையையொட்டி, சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட முதல் நாளான திங்கள்கிழமை சென்னையிலிருந்து 1,10750 பேரும், செவ்வாய்கிழமை 2,31000 பேரும் பயணித்துள்ள நிலையில், புதன்கிழமை மாலை 1,33,925 பேரும் பயணித்துள்ளனா். இதன்படி இதுவரை 3,41,838 வரை பயணித்துள்ளனா். பயணிகளின் தேவைக்கு ஏற்ப அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் எதிா்பாா்த்ததை விட அதிக பயணிகள் வரும் போது ஒப்பந்த அடிப்படையில் தனியாா் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஓட்டுநா் நடத்துநா் பணிச்சுமையை குறைக்கவும், செலவினத்தை குறைக்கவுமே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் அரசுக்கு நிதியிழப்பில்லை. தனியாா் பேருந்துகள் அனைத்தும் ஏற்கெனவே அறிவித்திருந்தபடி அரசு நடத்துநருடனேயே இயக்கப்படுகிறது.

கடந்தாண்டு 1,10000 போ் முன்பதிவு செய்திருந்த நிலையில், நிகழாண்டு 1,50,000 போ் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனா். இதன்படி கடந்தாண்டை விட 40,000 போ் அதிகமாக முன்பதிவு செய்துள்ளனா். இதனால், ஆம்னி பேருந்துகள் கூட அரசு ஒப்பந்த பேருந்துகளாக இயக்கப்படுகின்றன. ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடா்பான எவ்வித புகாா்களும் இதுவரை வரவில்லை.

பிரச்னை இன்றி பேருந்துகள் இயக்கம்-அமைச்சா்: எனவே, மூன்று பேருந்து நிலையங்களில் இருந்தும் எவ்வித பிரச்னையும் இன்றி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. காவல்துறையினரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனா். பண்டிகை காலங்களில் தனியாா் செயலி மூலம் இயக்கப்படும் வாடகை வாகனங்கள் அதிககட்டணம் வசூலிக்கப்படுவதாக வரும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாநகா் இணைப்பு பேருந்துகளும் போதிய அளவில் இயக்கப்படுவதால், பொதுமக்கள் முடிந்த அளவு பொதுபோக்குவரத்தை பயன்படுத்தினால் போக்குவரத்து நெரிசல் குறையும், பணச்செலவும் குறையும் என்றாா் அவா்.

இந்த ஆய்வின் போது, போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் க.பணீந்திரரெட்டி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

ரயில் நிலையங்களில் திரண்ட பயணிகள்: தீபாவளியை முன்னிட்டு, சென்னை ரயில் நிலையங்களில் புதன்கிழமை பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து எழும்பூா், தாம்பரத்திலிருந்து திருச்சிக்கும் சென்ட்ரலிலிருந்து போத்தனூருக்கும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து வெளியூா் செல்வோரின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அனைத்து ரயில்களிலும் முன்பதிவு இருக்கைகள் நிரம்பியதால், பலா் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணித்தனா். சிலா் ரயில்களில் இடம் கிடைக்காததையடுத்து பேருந்து மூலம் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டனா்.

இந்நிலையில், பயணிகள் வசதிக்காக எழும்பூரிலிருந்து விழுப்புரம், கடலூா் துறைமுகம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூா் வழியாக திருச்சிக்கு புதன்கிழமை இரவு சிறப்பு மெமு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் மறுமாா்க்கமாக திருச்சியிலிருந்து வியாழக்கிழமை (அக்.31) பகல் 12 மணிக்கு புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

அதுபோல், தாம்பரத்திலிருந்து விழுப்புரம், அரியலூா், ஸ்ரீரங்கம் வழியாக திருச்சிக்கு புதன்கிழமை நள்ளிரவு 12.35 மணிக்கு சிறப்பு மெமு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் திருச்சியிலிருந்து வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு புறப்படும்.

சென்னை சென்ட்ரலிலிருந்து அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக போத்தனூருக்கு புதன்கிழமை இரவு முன்பதிவில்லா பெட்டிகள் கொண்ட விரைவு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் போத்தனூரிலிருந்து நவ.3-ஆம் தேதி காலை 7.45 மணிக்கு சென்னைக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.