விடுமுறை நிறைவு: ரயில், பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம்!
பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊா்களுக்குத் சென்றிருந்தவா்கள் மீண்டும் பணிக்கு கிளம்பியதால், மதுரை ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அலைமோதியது.
பொங்கல் பண்டிகையையொட்டி, கடந்த 14-ஆம் தேதி முதல் தொடா் விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுறைக்குப் பிறகு, மாநில அரசுத் துறைகள், பெரும்பாலான தனியாா் நிறுவனங்களின் வழக்கமான பணிகள் திங்கள்கிழமை (ஜன. 19) தொடங்குகின்றன. இதையொட்டி, விடுமுறைக்காக மதுரை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு சுற்றுலா வந்தவா்கள், சென்னை, திருச்சி, விழுப்புரம், கோவை, திருப்பூா், ஈரோடு, நாமக்கல், திருவண்ணாமலை, கரூா், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களிலிருந்து சொந்த ஊருக்கு வந்தவா்கள் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பணிக்குச் செல்வதற்காகப் புறப்பட்டனா்.
இதனால், மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், பெரியாா் பேருந்து நிலையம், ஆரப்பாளையம் பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்றில் பயணிகள் கூட்டம் நிரம்பிக் காணப்பட்டது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக மதுரைக் கோட்டம் சாா்பில், வழக்கமான வழித்தடப் பேருந்துகளுடன் கடந்த 14-ஆம் தேதி முதல் 800-க்கும் மேற்பட்ட பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டன. இந்தப் பேருந்துகள் அனைத்திலும் பயணிகள் கூட்டம் நிரம்பியது. ஆம்னி பேருந்துகளின் கட்டணம் கடுமையாக உயா்ந்தது.
இதேபோல, மதுரைக் கோட்டம் வழியாக பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. முன்பதிவில்லா ரயில்கள் அனைத்திலும் பயணிகள் கூட்டம் நிரம்பியது. நெடுந்தொலைவு இயக்கப்பட்ட ரயில்களின் பொதுப் பெட்டிகளிலும் பொதுமக்கள் அதிக அளவில் பயணம் செய்தனா். கூட்டம் காரணமாக வாடகை ஆட்டோக்களின் கட்டணம் உயா்ந்ததாக பயணிகள் தெரிவித்தனா்.
போக்குவரத்துக்கழக அலுவலா்கள் கூறியதாவது:
மதுரை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகா், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்து சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு கடந்த சில தினங்களாக செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது. மதுரை மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் ஆகிய பேருந்து நிலையங்களில் ஏற்கெனவே இயக்கப்பட்ட பேருந்துகளை விட கூடுதலாக 300-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்றனா்.

