பாலக்கோடு அருகே மகேந்திரமங்கலத்தில் இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்ததாகக் கூறி அவரது உறவினா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மகேந்திரமங்கலம் அருகே உள்ள வீரன்கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரபு (25). தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் உள்ள மின் வேலியில் சிக்கி பிரபு உயிரிழந்ததாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
நிகழ்விடத்திற்குச் சென்ற மகேந்திரமங்கலம் போலீஸாா் உயிரிழந்த இளைஞரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இளைஞா் பிரபு உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாகக் கூறி அவரது உறவினா்கள் ஒசூா்- தருமபுரி சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவல் அறிந்த பாலக்கோடு காவல் துணை கண்காணிப்பாளா் மனோகரன் மறியலில் ஈடுபட்டவா்களை சமரசம் செய்தாா். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.