சென்னையில் கடந்தாண்டின் இரண்டாவது காலாண்டை காட்டிலும், இந்தாண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை 53 சதவிகிதம் சரிவை கண்டுள்ளது.
மேலும், புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்கள் மற்றும் வீட்டு மனை திட்டங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்ஸ் அசோசியேசன் கூட்டமைப்பு(சிஆர்இடிஏஐ) கவலை தெரிவித்துள்ளது.
சரிவில் அடுக்குமாடி குடியிருப்பு விற்பனை
சிஆர்இடிஏஐ-யின் தரவுகளின்படி, கடந்தாண்டு இரண்டாவது காலாண்டில், 98 புதிய குடியிருப்பு கட்டடங்கள் கட்டுவதற்கான திட்டங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு முதல் காலாண்டில், வெறும் 65 புதிய திட்டங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 34 சதவிகிதம் சரிவைக் கண்டுள்ளது.
ஒட்டுமொத்த தமிழகத்தை கணக்கில் கொண்டால், கடந்தாண்டு இரண்டாவது காலாண்டில், 123 திட்டங்கள் தொடங்குவதற்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு 91 திட்டங்கள் மட்டுமே பதிவாகியுள்ளது.
இதனிடையே, புதிதாக பதிவு செய்யப்படும் குடியிருப்புகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை ஒப்பிடும்போது மாநிலத்தில் 30 சதவிகிதமும், சென்னையில் 37 சதவிகிதமும் உயர்வை கண்டுள்ளது.
கடந்தாண்டு இரண்டாவது காலாண்டில், தமிழகத்தில் 7,977 குடியிருப்புகளும் சென்னையில் 6,435 குடியிருப்புகளும் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்தாண்டில் முறையே 10,333 மற்றும் 8,793 குடியிருப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்தாண்டு 5,498 அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனையான நிலையில், இந்தாண்டு 2,597 குடியிருப்புகள் மட்டுமே விற்பனையாகி 53 சதவிகிதம் சரிவைக் கண்டுள்ளது.
ரியல் எஸ்டேட்டின் சரிவு குறித்து சிஆர்இடிஏஐ-வின் தலைவர் முகமது அலி கூறுகையில்,“குடியிருப்புகளின் பதிவு அதிகரித்தாலும், புதிய திட்டங்கள் தொடங்குவது சரிவடைந்துள்ளது. மேலும், கட்டி முடிக்கப்பட்டு விற்கப்படாத குடியிருப்புகளின் எண்ணிக்கை கடந்தாண்டை காட்டிலும் அதிகரித்துள்ளது. இதில், கவனம் செலுத்த வேண்டியது அவசியம்” எனத் தெரிவித்துள்ளார்.