வேதாரண்யம் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மூழ்கிய விசைப்படகிலிருந்த 11 மீனவா்களை சக மீனவா்கள் புதன்கிழமை மீட்டனா்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு தென்கிழக்கே, சாமந்தான்பேட்டையைச் சோ்ந்த செந்தில் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் 11 மீனவா்கள் புதன்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது அவா்களது விசைப்படகில் ஓட்டை விழுந்து தண்ணீா் உள்ளே புகுந்தது. இதையடுத்து மீனவா்கள் உடனடியாக வாக்கிடாக்கி மூலம் அருகே இருந்த படகுகளுக்கு தகவல் தெரிவித்து உதவிக் கேட்டனா்.
உடனே அப்பகுதிக்கு விரைந்த ஐந்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளைச் சோ்ந்த மீனவா்கள், மூழ்கி கொண்டிருந்த விசை படகிலிருந்த மீனவா்களை மீட்டனா். தொடா்ந்து கடலில் மூழ்கிய படகை கயிறு மூலம் கட்டி கரைக்கு இழுத்து வர முயன்றனா், ஆனால் படகு கடலில் மூழ்கியது. இருப்பினும் படகை மீட்கும் பணியில் ஐந்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஈடுபட்டுள்ளன. இதுகுறித்து கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.