
திருச்சி: துறையூரில் தனியார் உணவத்திற்கு அரசுப் பள்ளி குழந்தைகளுக்கான முட்டைகளை விற்பனை செய்த புகாரில் சத்துணவு அமைப்பாளர் வசந்தகுமாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
துறையூரிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் வங்கிகளின் அருகில் உள்ள பிரபல தனியார் உணவகம் இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில் தமிழக அரசின் முத்திரையிடப்பட்ட சத்துணவு முட்டைகள் இருப்பதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் துறையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகின்றது.
தமிழக அரசால் பள்ளி கல்வித்துறை மூலம் அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்திற்காக வழங்கப்படும் சத்துணவு முட்டைகள் ஆம்லெட், ஆப்பாயில் என தயாரித்து அதிக விலைக்கு அமோகமாக விற்பனை செய்யப்படுவது பார்ப்போரையும் பொற்றோர்களையும், சமூக ஆர்வலர்களையும் வேதனை அடையச் செய்துள்ளது.
இதனை மாவட்ட ஆட்சியர் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் துறையூரில் உள்ள தனியார் உணவகங்களில் நேரில் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
சத்துணவு திட்ட அமைப்பாளர் பணியிடை நீக்கம்
இந்த நிலையில், துறையூரில் தனியார் உணவத்திற்கு அரசுப் பள்ளி குழந்தைகளுக்கான முட்டைகளை விற்பனை செய்த புகாரில் மதுராபுரி சத்துணவு அமைப்பாளர் வசந்தகுமாரி கைது செய்யப்பட்டு தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உணவகத்திற்கு சீல்
அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவுக்காக வழங்கப்படும் சத்துணவு முட்டைகளை வாங்கி பயன்படுத்திய உணவகத்திற்கு வட்டாட்சியர் தலைமையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்த நிலையில் அதன் உரிமையாளர் மீதும் வழக்குப் பதிவு செய்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.