ஆவடி: சென்னை அடுத்த ஆவடி அருகே, பூந்தமல்லியில், பேருந்து நிலையத்துக்கு அருகே இருந்த தெருவோரக் கடைகள், ஆக்ரமிப்புகள் என்று கூறி அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், அங்கு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
பூந்தமல்லியில், ஏற்கனவே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால், சாலைகள் குறுகி, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே, சாலையை ஆக்ரமித்து நடத்தி வந்த சிறு கடைகளை, மாநகராட்சி ஊழியர்கள் இன்று காலை முதல் அகற்றி வருகிறார்கள். இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், அங்கு நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மெட்ரோ ரயில் சேவை
மக்களின் அதீத வரவேற்பை பெற்று வருகிறது மெட்ரோ ரயில் திட்டம். அந்த வகையில், சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் - கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையும், கோடம்பாக்கம் பவா்ஹவுஸ் - பூந்தமல்லி பைபாஸ் வரை உயா்நிலை பாதையாகவும் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த வழித்தடத்தில் பூந்தமல்லி - போரூா் வரையிலான மெட்ரோ ரயில் பாதையை அடுத்த ஆண்டு டிசம்பரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், பூந்தமல்லியில் 2-ஆவது மிகப்பெரிய மெட்ரோ ரயில் பணிமனை அமைக்கப்படவுள்ளது. சுமாா் ரூ.187 கோடி செலவில் இதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மொத்தம் 17 கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும், மெட்ரோ ரயில் பழுதுபாா்க்கும் இடம், தானியங்கி முறையில் சுத்தப்படுத்தும் மையம் உள்ளிட்டவையும் இங்கு அமைக்கப்படவுள்ளன. இதில் சோதனை ஓட்டத்துக்கு தேவையான 820 மீட்டா் தொலைவுக்கு தண்டவாளம் அமைக்கும் பணி சமீபத்தில் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த மாதத்தில் இந்தப் பாதையில் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.