தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: உத்தரவிட்டவருக்கு பதவி உயர்வா? ஆட்சியர் விளக்கம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்ட அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதாக வெளியான செய்திக்கு மறுப்பு.
sterlite
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட படம்.Din
Published on
Updated on
1 min read

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்ட வருவாய்த் துறை அலுவலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதாக கண்டனங்கள் எழுந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக 2018-இல் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது போலீஸாா் துப்பாக்கிச்சூடு நடத்தினா்.

இதில், போராட்டக்காரர்கள் 13 பேர் உயிரிழந்த நிலையில், துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள அப்போதைய வருவாய்த் துறை அதிகாரி கண்ணன் உள்பட பலர் மீது விசாரணை நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் துணை வட்டாச்சியர்களுக்கு வட்டாச்சியராக கடந்த வாரம் பதவி உயர்வு வழங்கப்பட்டது.

இதில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டதாக கூறப்படும் கண்ணன் என்பவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக கண்டனம் எழுந்தது.

மாவட்ட ஆட்சியர் விளக்கம்

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் 20 துணை வட்டாட்சியர்களுக்கு கடந்த 06.09.2024 அன்று வட்டாட்சியராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்காக உத்தரவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வருவாய்த்துறை அலுவலர்களில் ஒருவருக்கு வட்டாட்சியராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வன்முறை சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையில் துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய வருவாய்த்துறை அலுவலராக குற்றம் சாட்டப்பட்டுள்ள மு.கண்ணன் என்பவருக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை.

மாறாக திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் துணை வட்டாட்சியராகப் பணிபுரிந்த திரு து.கண்ணன் என்பவருக்கு வட்டாட்சியராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. பதவி உயர்வு அளிக்கப்பட்ட து.கண்ணன் என்பவருக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

பெயர்க்குழப்பம் காரணமாக செய்தி ஊடகங்கள் தவறான தகவலை வெளியிட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com