சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை கடுமையான விலை உயர்வை சந்தித்துள்ளது. இதனால், தங்கம் வாங்க வேண்டிய மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னையில், புதன்கிழமை காலை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.480 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.56,480க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுபோல, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை 7 ஆயிரம் ரூபாயாக நேற்று இருந்த நிலையில், இன்று ரூ.7,060 ஆக உயர்ந்துள்ளது.
24 காரட் தங்கம் விலை, ஒரு சவரனுக்கு ரூ.528 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.61,616 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ரூ.61,088 ஆக இருந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.7702 ஆக அதிகரித்துள்ளது.
நூறு ரூபாயைத் தொட்ட வெள்ளி
தங்கத்துடன் போட்டிப் போட்டுக்கொண்டு வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 அதிகரித்து இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.101க்கு விற்பனை செய்யப்படுகிறது.
செப்டம்பர் 16ஆம் தேதி முதல், விலை ஏறுவது, இறங்குவது என இருந்து வந்த தங்கம் விலை, 20ஆம் தேதி முதல் தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், கிட்டத்தட்ட ஓராண்டுக்கு ஒருசில நூறுகள்தான், கிராம் விலையில் ஏற்றம் ஏற்படும். ஆனால், கடந்த ஒரு சில ஆண்டுகளாக ஒரு ஆண்டுக்கு ஆயிரம் என்ற அளவில் ஒரு கிராம் விலை ஏற்றம் கண்டு வருகிறது. அதாவது, கடந்த ஆண்டு 6,200 என்ற அளவில் இருந்த தங்கம் விலை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஐந்து ஆயிரத்தில் இருந்துள்ளது. தற்போது, ஏழு ஆயிரத்தை தங்கம் விலை தொட்டிருப்பதால், மக்கள் கவலை அடைந்துள்ளனர்.