அம்பாசமுத்திரம்: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்று சுழற்சி தமிழக கடற்கரையை நெருங்கும் நிலையில், செப். 28 முதல் தென் தமிழகத்தில் பரவலாக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் தென்காசி ராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
“வங்க கடலில் உருவாகியுள்ள காற்று சுழற்சி, தமிழக கடற்கரையை நெருங்கும் நிலையில் செப்டம்பர் 28-ம் தேதி முதல் கிழக்கு திசை காற்று தற்காலிகமாக வீசத் துவங்கும்.
இதனால் செப்டம்பர் 28-ஆம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் மழையின் அளவு படிப்படியாக அதிகரிக்கும். கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மாவட்டங்கள் சேலம், நாமக்கல், மதுரை உள்ளிட்ட உள் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் தமிழக மாவட்டங்களிலும் கனமழையை எதிர்பார்க்கலாம்.
எனவே, தென் தமிழக மாவட்டங்களில் வெள்ளிக்கிழமையுடன் (செப்.27) அறுவடைப் பணிகளை நிறுத்தி கொள்ளவும். தற்போது அறுவடைப் பணி நடைபெறும் இடங்களில் வியாழக்கிழமை (செப்.26) இரவும் அறுவடையைத் துரிதப்படுத்தி நிறைவு செய்யவும். ஏற்கனவே அறுவடை செய்யப்பட்ட பயிர்களை மழையில் நனையாதவாறு பாதுகாப்பை பலப்படுத்தவும்” என்று தெரிவித்துள்ளார்.