நெல்லையில் இடியுடன் கூடிய மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவ மழை பொய்த்து போனதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். மேலும் கடந்த ஒரு மாதமாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.
குறிப்பாக 10 தினங்களுக்கு மேலாக 100 டிகிரியும் தாண்டி வெயில் அடித்து வருவதால் பொதுமக்கள் வெளியே வர முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் ஒரு மணிக்கு மேல் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொக்கிரகுளம், பாளையங்கோட்டை டவுன், வண்ணார்பேட்டை, ரெட்டியார்பட்டி உள்பட்ட பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதிக வெப்பம் காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளில் தண்ணீர் வெகுவாகக் குறைந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தற்பொழுது பெய்யும் இந்த மழை தொடர்ந்து பெய்தால் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.