
சினிமாவிலிருந்து விலகுவதாக நடிகர் விஜய் அறிவித்துள்ளார். நடிகர் விஜய்யின் புதிய கட்சிகு தமிழக வெற்றி கழகம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது.
"வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபின், வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள்,கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும்.
வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் நம் ஆதரவு இல்லை என்றும் பொதுக்குழ, மற்றும் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பதையும் தாழ்மையுடன் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்து தெரிந்து கொள்ள, எம்முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்து நீண்டகாலமாக என்னை அதற்கு தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன்.
இதையும் படிக்க: நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியா? நடிகர் விஜய் பதில்
எனவே அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன். என் சார்பில், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ் நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.