அரசியல் கட்சி தொடங்கிய விஜய்: வாழ்த்தி, வரவேற்ற அரசியல் பிரமுகர்

அரசியல் கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் விஜய்க்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சி தொடங்கிய விஜய்: வாழ்த்தி, வரவேற்ற அரசியல் பிரமுகர்


சென்னை: திரைப்பட நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி, தமிழக வெற்றி கழகம் என்று பெயர் சூட்டியிருக்கிறார். அரசியல் கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் விஜய்க்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார்.

அரசியலில் திரைப்பட நடிகர்கள் பல ஆண்டுகாலமாக கோலோச்சி வருகிறார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் போன்ற தலைவர்களைத் தொடர்ந்து, சரத்குமார், கருணாஸ் உள்ளிட்டோரும் தனித்தனியாக அரசியல் கட்சிகளைத் தொடங்கி நடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியிருக்கிறார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

விஜய் அரசியல் கட்சித் தொடங்குவது என்பது பல காலமாக பேசப்பட்டு வந்தாலும், இன்று அரசியல் கட்சியைத் தொடங்கியிருப்பது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, விஜய் அரசியல் கட்சித் தொடங்கியிருப்பதற்கு வரவேற்பு தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், தமிழக மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும் ஊழல் அரசியலுக்கு எதிராகவும், பாகுபாடற்ற, நேர்மையான, அரசியல் மாற்றம் உருவாகவும், மக்களுக்காகப் பணியாற்ற, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியிருக்கும் சகோதரர் விஜய் அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

அரசியல் கட்சி தொடங்குவது குறித்து விஜய் வெளியிட்ட அறிவிப்பில், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் "பிளவுவாத அரசியல் கலாச்சாரம்" மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன. ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகதிற்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" (பிறப்பால் அனைவரும் சமம் என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள்சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com