அரசியல் ஏன்? நடிகர் விஜய் விளக்கம்

சினிமாவை விட்டு விலகி, அரசியலில் ஈடுபடவிருக்கும் நடிகர் விஜய், தனது அரசியல் கட்சியின் பெயரை இன்று அறிவித்துள்ளார். மேலும், சினிமாவை விட்டு விலகப்போவதாகவும் அறிவித்துவிட்டார்.
நடிகர் விஜய்
நடிகர் விஜய்
Published on
Updated on
2 min read


சினிமாவை விட்டு விலகி, அரசியலில் ஈடுபடவிருக்கும் நடிகர் விஜய், தனது அரசியல் கட்சியின் பெயரை இன்று அறிவித்துள்ளார். மேலும், சினிமாவை விட்டு விலகப்போவதாகவும் அறிவித்துவிட்டார்.

தமிழக வெற்றிக் கழகம் என்று தனது கட்சிக்குப் பெயர் சூட்டியிருக்கும் நடிகர் விஜய், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துவிட்டார்.

இந்த நிலையில், நல்ல படங்களில் நடித்து, அவர் நடிக்கும் படங்கள் வெற்றிப்படங்களாக இருக்கும் நிலையில், அவர் சினிமாவை விட்டு விலகி, அரசியலில் ஈடுபடப்போவது ஏன் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

அது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் விஜய் கூறியிருப்பதாவது, "விஜய் மக்கள் இயக்கம்" பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.

தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் "ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்" ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் "பிளவுவாத அரசியல் கலாச்சாரம்" மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன. ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகதிற்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" (பிறப்பால் அனைவரும் சமம் என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள்சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும்.

இந்நிலையில், என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும். "எண்ணித் துணிக கருமம்" என்பது வள்ளுவன் வாக்கு. அதன்படியே, "தமிழக வெற்றி கழகம்" என்கிற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சியின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார் விஜய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com