சேலம்: அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை விழாவில் பங்கேற்பது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் மூலவர் பிரதிஷ்டை விழா ஜன. 22-ஆம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 136 சனாதனத்தைச் சேர்ந்த 25,000 ஹிந்து மதத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு சிறப்பு விருந்தினர்களாக 10,000 பேர் பங்கேற்கவுள்ளனர். இதுபோன்று இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு சிலை பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த விழாவை அரசியலாக்குவதால் பங்கேற்க போவதில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு ராமர் கோயில் அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சேலம் விமான நிலையத்தில் அயோத்தி விழாவில் பங்கேற்பது குறித்த செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்து இபிஎஸ், “அயோத்தி ராமர் கோயில் விழாவில் எந்த மதத்தினரும், எந்த சாதியினரும் கலந்து கொள்ளலாம். எனக்கு கால் வலி இருப்பதால் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. வாய்ப்பிருந்தால் கலந்து கொள்வேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
அயோத்தி விழாவில் பங்கேற்பது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் நிலைபாடு குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.