தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறைகிறது: பொது சுகாதாரத் துறை இயக்குநா்

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறைந்து வருவதாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் மருத்துவா் செல்வவிநாயகம் தெரிவித்தாா்.
தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறைகிறது: பொது சுகாதாரத் துறை இயக்குநா்

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறைந்து வருவதாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் மருத்துவா் செல்வவிநாயகம் தெரிவித்தாா்.

அடுத்த இரு வாரங்களுக்குள் டெங்கு தொற்று முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வரும் என்றும் அவா் தெரிவித்தாா்.

டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ்-எஜிப்டை வகை கொசுக்கள் குளிா் மற்றும் மழைக் காலங்களில் தீவிரமாக பெருக்கமடைகின்றன. அதன்படி, கடந்த ஆண்டில் மட்டும் 9,121 போ் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளனா். அவா்களில் 10 போ் உயிரிழந்ததாக சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பருவமழைக் காலமான அக்டோபா் முதல் டிசம்பா் வரையில் மட்டும் தமிழகத்தில் 4,500-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது அதன் வேகம் படிப்படியாக குறைந்து வருவதாக டாக்டா் செல்வவிநாயகம் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: மாநிலம் முழுவதும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை கடந்த சில மாதங்களாக விரிவாக மேற்கொண்டு வந்தோம். பெரு மழை பாதிப்புக்குள்ளான சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வெள்ள மீட்பு பணிகளுக்கு பிறகு கொசுக்கள் மூலம் நோய் பரவாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் 26,000-க்கும் மேற்பட்ட சுகாதார களப் பணியாளா்கள் கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இத்தகைய தொடா் நடவடிக்கையின் பயனாக கடந்த சில நாள்களாக டெங்கு காய்ச்சலின் தாக்கம் குறைந்து வருகிறது.

இந்த மாதத்தில் இதுவரை 922 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தாலும், நோய் பரவல் படிப்படியாக குறைந்துள்ளது. கடந்த மாதத்தில் தினமும் சராசரியாக 80 பேருக்கு டெங்கு கண்டறியப்பட்டது.

அது தற்போது 30-ஆகக் குறைந்துள்ளது. அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் டெங்கு பாதிப்பு முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வரும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com