பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தார்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (22.01.2024)  பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை  தொடக்கிவைத்தார்.
பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தார்!
Published on
Updated on
2 min read

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (22.01.2024)  பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை  தொடக்கிவைத்தார்.

சென்னை பெருநகர காவல் துறையின் பயன்பாட்டிற்காக ஹூண்டாய் கிரெட்டா, இன்னோவா கிரிஸ்டா மற்றும் பொலிரோ ஜீப் ஆகிய வாகனங்களின் சேவைகளை கொடியசைத்து தொடக்கிவைத்தார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கட்டப்பட்டுள்ள நவீன நெல் சேமிப்பு தளங்களை திறந்து வைத்து, மேலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிக்காலத்தில் இயற்கை எய்திய பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக சேவை புரிந்தமைக்காக சிறந்த சமூக பணியாளர் விருது, சிறந்த நிறுவனத்திற்கான விருது, சிறந்த ஆசிரியருக்கான விருது, சிறந்த பணியாளர் / சுய தொழில் புரிபவருக்கான விருது, மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய நிறுவனத்திற்கான விருது, சிறந்த ஆரம்பநிலை பயிற்சி மைய ஆசிரியருக்கான விருது, மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கான விருது ஆகிய விருதுகளை விருதாளர்களுக்கு வழங்கி சிறப்பித்தார்.

கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில், சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா திட்டத்தின் கீழ் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்களுக்கு திட்ட ஒப்புதல் அரசாணைகளையும், ஜவுளி தொழில் முனைவோர்களுக்கான அரசு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு 10 விழுக்காடு கூடுதல் மூலதன முதலீடு மானியத்தொகைக்கான காசோலைகளையும் வழங்குகினார்.

உயர்கல்வித் துறை சார்பில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகங்கள், கலையரங்கம், விருந்தினர் மாளிகை, உடற்பயிற்சிக்கூடம், அணுகுசாலை, விடுதிகள், பணிமனைகள், கழிவறை தொகுதிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான கட்டடம் போன்ற பல்வேறு கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் “தமிழ் அகராதியின் தந்தை” வீரமாமுனிவரின் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லத்தில் மார்பளவு சிலை, பெரும்புலவர் கணியன் பூங்குன்றனார் நினைவுத்தூண் ஆகியவற்றை திறந்து வைத்து, மேலும், சுதந்திர போராட்ட வீராங்கனை குயிலி அவர்களுக்கு திருவுருவச் சிலை, சுதந்திரப் போராட்ட வீரர்கள் “வாளுக்குவேலி அம்பலம்” மற்றும் “வெண்ணி காலாடி “ ஆகியோருக்கு  திருவுருவச் சிலைகள், அண்ணல் காந்தியடிகள் – தோழர் ஜீவா ஆகியோரின் சந்திப்பின் நினைவாக சிவகங்கை மாவட்டம், சிராவயல் கிராமத்தில் அரங்கம் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம். பெரியபாளையம், அருள்மிகு பவானியம்மன் திருக்கோயில், விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர், அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில், கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை, அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தைக் காணொலிக் காட்சி வாயிலாக தொடக்கிவைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com