
அரசுப் பேருந்துகளை விட ஆம்னி பேருந்துகளுக்கு கூடுதல் பணம் கொடுத்தும் நிம்மதியாக பயணிக்க முடியவில்லையே என்று கிளாம்பாக்கத்தில் இறக்கிவிடப்படுவதால், அங்கிருந்து தங்களது பகுதிகளுக்குச் செல்ல அவதிப்படும் பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளையும், ரயில்களையும் தவிர்த்துவிட்டு, அதிகக் கட்டணமாக இருந்தாலும் பரவாயில்லை என்று ஆம்னி பேருந்துகளை தேர்வு செய்யும் பயணிகள், எதிர்பார்ப்பது நிம்மதியான பயணம் ஒன்றைத்தான். ஆனால், அவர்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் ஏமாற்றம் அடைவதாகக் கூறுகிறார்கள்.
கிளாம்பாக்கத்தில்தான் ஆம்னி பேருந்துகளை நிறுத்த வேண்டும் என்று அரசும், கோயம்பேட்டில்தான் நிறுத்துவோம் என ஆம்னி பேருந்து உரிமையாளர்களும் போர்க்கொடி தூக்கியிருக்கும் நிலையில், நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படுவது என்னவோ பயணிகள்தான்.
திருச்சி, மதுரை மற்றும் இதர தெற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களிலிருந்து வரும் ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அனைத்து பயணிகளையும் இறக்கிவிடுமாறு போக்குவரத்துக் காவல்துறையினர் அறிவுறுத்தி வருகிறார்கள்.
அவ்வாறு கிளாம்பாக்கத்தில் இறக்கிவிடப்படும் பயணிகள், தங்களது கனத்த உடைமைகளுடன், அங்கிருந்து மாநகரப் பேருந்து வரும் வழித்தடத்துக்கு வர வேண்டும். அங்கே கோயம்பேடு அல்லது அவர்களது ஊர்களுக்கு அருகே செல்ல வேண்டும் என்றால் ஒரே வழி மாநகரப் பேருந்துகள்தான். அதில்தான் அவர்கள் கோயம்பேடு சென்று அங்கிருந்து அவரவர் பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதையும் படிக்க.. அம்மாவின் வாசனை.. வெளிவராத பவதாரணியின் பாடலை வெளியிட்ட கனிமொழி
பொதுவாக ஆம்னி பேருந்துகளை நாடுவோர், நிம்மதியாக செல்ல வேண்டும் என்பதற்காகதத்தான் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளையும் ரயில்களையும் விட்டுவிட்டு 20 முதல் 30 சதவீதம் கூடுதல் கட்டணம் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள். ஒருவேளை, கிளாம்பாக்கத்திலிருந்து மாநகரப் பேருந்தில் செல்ல விரும்பவில்லை என்றால், அவர்கள் அங்கிருந்து வாடகைக் காரில் செல்ல வேண்டும் என்றால் அதற்கு கூடுதலா ரூ.1000 முதல் 1500 வரை செலவாகும் என்கிறார்கள் பயணிகள்.
இதனால், கிளாம்பாக்கத்தில் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் வசதி ஏற்படுத்தும் வரையிலாவது பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்து இயக்க வேண்டும் என்று பயணிகள் அனைவருமே ஒருமித்த குரலில் வலியுறுத்துகிறார்கள்.
மறுபுறம், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் கூறப்படுவது என்னவென்றால், நாள் ஒன்றுக்கு 700 முதல் 750 பேருந்துகள் இயக்கப்படுகிறது என்றால் கிளாம்பாக்கத்தில் வெறும் 140 ஆம்னி பேருந்துகளைத்தான் ஒரே நேரத்தில் நிறுத்த முடியும். இங்கு வார நாள்களில் அதிகபட்சமாக 50 ஆயிரம் பயணிகளும், வார இறுதி நாள்களில் 65 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பயணிகளும் வருவார்கள். அவர்கள் அனைவரும் கிளாம்பாக்கம் வந்து செல்ல வசதியும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதுமான வசதிகளும் கிடைக்காது என்று குறிப்பிடுகிறார்கள்.
இங்கே நிறுத்த வசதி இல்லாததால், கோயம்பேடு வரை காலிப் பேருந்தை எடுத்துச் சென்று நிறுத்த வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் வேதனை தெரிவிக்கிறார்கள்.
இதற்கிடையே மாநகரப் பேருந்து நிர்வாகம் சார்பில் கூறப்படுவது என்னவென்றால், ஒவ்வொரு 10 நிமிடத்துக்கும் ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. காலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று விளக்கம் அளித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.