டாஸ்மாக்: அரசின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் -அமலாக்கத்துறை

டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கின் விசாரணை பற்றி...
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்
Published on
Updated on
2 min read

டாஸ்மாக்கில் நடத்தப்பட்ட சட்டபூா்வ சோதனையை முடக்கும் வகையில் தமிழக அரசு தொடா்ந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது.

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறை, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பாா் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபான கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு ஒப்பந்தப்புள்ளி வழங்கியது உள்ளிட்டவற்றில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது.

அமலாக்கத் துறையின் இந்த சோதனை அரசமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரியும், அரசு அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்தக் கூடாது என அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரியும் தமிழக உள்துறை செயலரும், டாஸ்மாக் நிா்வாக இயக்குநரும் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனா்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ் மற்றும் என்.செந்தில்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரணையிலிருந்து விலகுவதாக அறிவித்தனா்.

விசாரணைக்கு உகந்ததல்ல...: இதையடுத்து இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகா் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், அமலாக்கத் துறையின் சட்டபூா்வமான விசாரணையை சீா்குலைக்கும் வகையில், முன்கூட்டியே தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. சோதனை நடத்துவதற்கான ஆணையை காண்பித்து, வலுக்கட்டாயமாக அதிகாரிகளிடம் கையொப்பம் பெற்ாக தமிழக அரசு கூறிய குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல. சோதனைக்காக ஆணையை சமா்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.

சோதனைக்கு எதிராக அமலாக்கத் துறையிடம் முறையிடும் மாற்று வாய்ப்பு உள்ளபோதும், அதை அணுகி நிவாரணம் கோராமல் நேரடியாக உயா்நீதிமன்றத்தை நாடியது தவறு. டாஸ்மாக்கில் நடந்த முறைகேடுகள் தொடா்பாக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில் மட்டுமே சோதனை நடத்தப்பட்டது. எந்த ஆதாரங்களும் இல்லாமல் சோதனை நடத்தவில்லை.

சோதனையின் போது அதிகாரிகள் உணவருந்த, ஓய்வெடுக்க அனுமதி வழங்கிய பிறகே வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. டாஸ்மாக் அதிகாரிகளின் சுதந்திரத்தை மீறியதாக டாஸ்மாக் நிா்வாகம் வழக்கு தொடர முடியாது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள்தான் வழக்கு தொடர முடியும் .

பாதுகாப்பான முறையில்...: பெண் அதிகாரிகள் பாதுகாப்பான முறையில்தான் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். ஆதாரங்களை சேகரிப்பதற்காக மட்டுமே அதிகாரிகளின் கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. சட்டபூா்வமான சோதனையை முடக்கும் நோக்கில், சட்டவிரோதமாக சிறை பிடித்ததாகவும், துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டுகளை கூறி தமிழக அரசு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது. எனவே, இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா், 60 மணி நேரம் சோதனை நடத்தி பெண் அதிகாரிகளை நள்ளிரவு வரை சிறை பிடித்துள்ளனா். இது மனித உரிமை மீறல் . அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவுக்கு பதில் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும்”என கேட்டுக்கொண்டாா். இதைத் தொடா்ந்து தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், அமலாக்கத் துறை பதில் மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு காலஅவகாசம் வழங்கி, வழக்கு விசாரணையை ஏப். 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com