வரும் 9 ஆம் தேதி அண்ணாமலை மாற்றம்? தமிழக பா.ஜ.க. புதிய தலைவர் யார்?

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சிக்குப் புதிய தலைவர் அறிவிக்கப்படுவது பற்றி...
தமிழக பாஜக தலைவர்கள் போட்டியில்..
தமிழக பாஜக தலைவர்கள் போட்டியில்..
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவர் வரும் 9 ஆம் தேதி அறிவிக்கப்படலாம் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை மாற்றப்படுவார் என அவ்வப்போது செய்திகள் வெளியாகிவந்தபோதிலும் இதுவரை எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அண்மையில் திடீரென எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவின் உயர் தலைவர்கள் சந்தித்துப் பேசிய நிலையில், அண்ணாமலை மாற்றம் பற்றிய தகவல்கள் மீண்டும் வலுப்பெற்றன. அதிமுக – பாஜக கூட்டணி வாய்ப்புகளும் பிரகாசமடைந்தன.

அதிமுக தலைவர்களுக்கும் அண்ணாமலைக்கும் இடையிலான உறவு கசப்பாக இருந்த நிலையில், உறவை இணக்கமாக்க அண்ணாமலை மாற்றம் தவிர்க்க முடியாததாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. செய்திகளும் வலம் வந்தன.

இதனிடையே, தமிழ்நாடு தலைமைப் பதவிக்கான போட்டியில் தாம் இல்லை என அண்ணாமலை வெளிப்படையாகவே செய்தியாளர்களுடன் பேசுகையில் அறிவித்துவிட்டார்.

இத்தகைய சூழ்நிலையில்தான், வரும் 9 ஆம் தேதி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்றி, அறிவிப்பு வெளியிட கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அமித்ஷா அறிவுறுத்தலின்படி வரும் 7, 8 ஆம் தேதிகளில் சென்னையில் கட்சியின் மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இந்தக்  கூட்டத்தில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கலந்துகொள்கிறார்.

கூட்டத்திற்கு பிறகு தனது அறிக்கையை தில்லி தலைமையிடம் 9 ஆம் தேதி கிரண் ரஜிஜு வழங்குவார் என்றும் தொடர்ந்து, ஏற்கெனவே திட்டமிட்டபடி புதிய மாநிலத் தலைவர் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று தகவலறிந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழ்நாடு மாநிலத் தலைவர் அறிவிப்போடு சேர்த்து, மேலும் 13 மாநிலங்களுக்கு புதிய தலைவர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டின் புதிய தலைவர்களுக்கான போட்டியில் அதிமுகவிலிருந்து வந்தவரான நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன் போன்றோரின் பெயர்கள் பேசப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com