
நீட் தேர்வுக்கு விளக்கு அளிக்கக் கோரும் சட்டப் போராட்டம் தொய்வின்றி தொடரும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நீட் விலக்கு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று தொடங்கியது.
நீட் தேர்வு விலக்கு தொடர்பாக அடுத்தகட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாகத் தெரிகிறது.
இக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
''நீட் தேர்வுக்கு எதிராக நீதிமன்றத்தில் தொடர்ந்து போராடி வருகிறோம். மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு தமிழக மாணவர்களை வெகுவாக பாதித்தது. மருத்துவப் படிப்பில் மாணவர்களை சேர்க்கும் உரிமையை மாநில அரசிடமிருந்து மத்திய அரசு பறித்துக் கொண்டது.
மத்திய அரசால் நடத்தப்படும் நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. ஏ.கே.ராஜன் குழு அளித்த பரிந்துரைகளின்படி, நீட் விலக்கு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வை ரத்து செய்யும் சட்டம் பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம்.
அரசியல் செய்தார் ஆளுநர்
மருத்துவத்துறையில் இந்தியாவுக்கே முன்னோடியாகத் திகழ்கிறது தமிழ்நாடு. நீட் விலக்கு சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் அரசியல் செய்ய ஆரம்பித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி.
நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டது.
பொருளாதார வளமிக்கவர்களுக்கு மட்டுமே நீட் தேர்வு சாதகமாக உள்ளது என்பதையே ஏ.கே.ராஜன் குழு குறிப்பிட்டது. சட்ட போராட்டத்தை தொய்வின்றி தொடர்ந்தால் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியும் என்கிற நம்பிக்கை உள்ளது'' எனக் குறிப்பிட்டார்.