
மகளின் திருமணத்துக்குச் சென்ற தாய் சாலை விபத்தில் பலியான நிலையில், தாய் இறந்த செய்தியை மகளுக்குத் தெரிவிக்காமலேயே, அவரது உறவினர்கள் திருமணத்தை நடத்தி வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் ஊரணிபுரம் அருகே அய்யானபுரத்தை சேர்ந்தவர்கள் ரங்கசாமி (54) - மாலதி (50) தம்பதியினர். இவர்களின் மகள் திருமணம் ஊரணிபுரம் திருமண மண்டபத்தில் நடைபெறும் நிலையில் மகளின் திருமணத்திற்காக இருசக்கர வாகனத்தில் ரங்கசாமி - மாலதி இருவரும் சென்றுள்ளனர்.
அப்போது சாலையோரம் இருந்த பள்ளத்தில் நிலைத்தடுமாறியதில் இருசக்கர வாகனம் அருகில் இருந்த பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மாலதி உயிரிழந்தார். ரங்கசாமி உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
இதை அறிந்த உறவினர்கள் மகளிடம் தாய் இறந்ததை தெரிவிக்காமல் பெற்றோர் வந்துவிடுவார்கள் என்று கூறி திருமணத்தை நடத்தி முடித்தனர். மகளை திருமணக் கோலத்தில் காணச் சென்ற தாய் பிணக்கோத்தில் மாறியதால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.
திருமண நிகழ்வு நல்லபடியாக நடந்து முடிந்த பின்னர்தான், தாய் இறந்த செய்தி மகளிடம் தெரிவிக்கப்பட்டது. அதைக் கேட்டு மணமகள் துடிதுடித்துப் போன நிகழ்வு அங்கிருந்து அனைவரையும் வேதனடையச் செய்தது.