ராமதாஸ் எனும் நான், பாமக நிறுவனர் என்ற அடிப்படையில் தலைவர் பொறுப்பையும் நானே எடுத்துக்கொள்கிறேன், இப்போது கட்சியின் தலைவர் - நிறுவனர் நான்தான் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிவிப்பு, அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த அறிவிப்புடன், இனிமேல் அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக செயல்படுவார் என்றும் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பினால், பாமகவில், அன்புமணியின் ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்திலும் ஈடுபட்டு வருவதாக ஒரு சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்சியில் இருக்கும் பொருளாளர் உள்ளிட்ட சில தலைவர்களும்கூட, ராமதாஸின் இந்த அறிவிப்புக்கு தங்களது அதிருப்தியை நேரடியாகவும் மறைமுகமாகவும் பதிவு செய்து வருகிறார்கள்.
ஏன் இந்த முடிவு என்பதற்கு ராமதாஸ் அளித்த விளக்கத்தில், 2026ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலை முன்னிட்டு இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
பாமகவில் தந்தை-மகன், நிறுவனர் - தலைவர் இடையே இருந்த உள்கட்சி உரசல் இன்று வெடித்து வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. பாமகவின் தலைவராக நானே இருப்பேன் என்றும், தலைவராக இருந்து வந்த அன்புமணி இனி செயல் தலைவராக செயல்படுவார் என்றும் ராமதாஸ் இன்று அதிரடியாக அறிவித்தே விட்டார்.
ஏற்கெனவே, பாமகவின் பொதுக்குழுவில் கட்சியின் இளைஞரணித் தலைவராக, ராமதாஸ் தனது மகள் வழிப் பேரன் முகுந்தனை நியமித்தபோது மேடையிலேயே தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார் அன்புமணி.
கட்சியில் இணைந்து 4 மாதங்களே ஆன நிலையில், ஒருவருக்கு பதவியா? குடும்பத்துக்குள் இருப்பவர்களுக்கே எத்தனை பதவி? என்றெல்லாம் அன்புமணி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். அப்போதே அதற்கு ராமதாஸ் பதிலளிக்க, அன்புமணி பொதுக்குழுவிலிருந்து வெளியேறினார்.
உண்மையில் பாமகவுக்குள் உள்கட்சிப் பூசல் என்பது இந்த நிகழ்வு மூலமாகத்தான் வெளியே வந்தது. ஆனால், தற்போது தலைவர் நானே என ராமதாஸ் அறிவித்திருப்பது, உள்கட்சிப் பூசல் போராக மூண்டிருப்பதாகவே பார்க்கப்படுகிறது.
இந்த உள்கட்சிப் பூசலுக்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்தபோது, குடும்பத்துக்குள் பதவிகளை வழங்குவதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளா? கட்சிப் பதவி நியமனங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் உச்சமா? என கேள்விகள் எழுந்தன.
ஆனால், 2026 பேரவைத் தேர்தல், தேர்தல் கூட்டணிக் கணக்கு, அதனை நிறுவனரும் முன்னாள் தலைவரும் கூட்டிக்கழித்துப் பார்த்த விதம்தான் மோதல் போக்குக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.
பாஜக - அதிமுக - பாமக இணைந்து கடந்த தேர்தலில் போட்டியிட்டன. பாமகவினர் நான்கு பேர் எம்எல்ஏக்களும் ஆகினர். அதுபோல, பாஜக - அதிமுக கூட்டணி இருந்ததால், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் கிடைத்தது. அதை அன்புமணி ஏற்றார். ஆனால் தற்போது பாஜக - அதிமுக இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. இது அமித் ஷாவின் வருகைக்குப் பின்பு மாறவும் செய்யலாம். அல்லது ஊகமாகவும் இருக்கலாம்.
ஏற்கனவே மக்களவைத் தேர்தலின்போது பாஜகவுடன் பாமக கரம்கோத்து பெருத்த தோல்வியையும் அடைந்திருந்தது. திமுக - அதிமுகவுக்குப் பிறகு மாநிலத்தின் பெரிய கட்சி என்ற அந்தஸ்தில் இருந்த பாமகவுக்கு ஒரு மக்களவைத் தொகுதியும் கிடைக்கவில்லை. இதுவும் ராமதாஸுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில்தான், வரும் தேர்தலில் பாஜக - அதிமுக தனித்தனியாக நின்றால், அதிமுகவுடன் கூட்டணி வைத்தால், தமிழகத்தில் அதிமுகவுக்கு என இருக்கும் வாக்குகள் பாமகவுக்கு விழும். அதனால் வெற்றி பெற முடியும். ஆனால் பாஜகவுடன் இணையும்போது பாமகவின் வாக்கு வங்கியே சேதமடைகிறது என்பது கட்சி நிறுவனரின் கணிப்பாக உள்ளதாம்.
தலைவராக இருந்த அன்புமணியின் கணக்கோ, பாஜக கூட்டணியில், அதிமுகவின் ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினரான தான், பாஜகவுடன் கூட்டணியைத் தொடர்ந்தால், மீண்டும் எம்.பி.யாகி மத்திய அமைச்சர் பதவியைப் பெறலாம் என்று இருக்கிறதாம்.
இது தொடர்பாக கட்சி நிறுவனர் - தலைவர் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு வந்த நிலையில்தான், மிகச் சரியாக தமிழகத்துக்கு பாஜக தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா இன்று வரவிருக்கும் நிலையில், கூட்டணி குறித்து அன்புமணி ஏதேனும் முடிவெடுத்து அறிவித்துவிடலாம் என்பதால், கட்சியின் தலைவர் நானே எனவும் அன்புமணி செயல்தலைவர் எனவும் அறிவிப்பு வெளியாகியிருக்கலாமோ என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. ஆனால், குருவி விழ... என்ற பழமொழிக்கு ஏற்ப, ஏதோ ஒரு நாளில் அமித் ஷா வர, அதே நாளில் இந்த அறிவிப்பும் வெளியாகியிருக்கலாம் என்றும் பேசப்படுகிறது.
உண்மையில், பாமகவின் எதிர்காலம் கருதி, இளைஞர்களுக்கு வழிகாட்டவும், சரிந்திருக்கும் கட்சியின் அந்தஸ்தை மீண்டும் உயர்த்தவுமே ராமதாஸ் இந்த முடிவை எடுத்திருக்கலாம். வரும் பேரவைத் தேர்தலில் தீயாய் வேலை செய்து பாமகவுக்கு என இருந்த வாக்கு வங்கியை சீரமைக்கவும் உதவலாம்.
பாமகவின் தலைவராக மீண்டும் ராமதாஸ் வந்துவிட்டால், அவரது ஆதரவாளர்களுக்கும் புதிய உற்சாகம் பிறக்கலாம். எனவே, அரசியலில் மாற்றம் ஒன்றே மாறாதது. எதுவாக இருந்தாலும் பொருத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படிக்கலாம்.. தஹாவூர் ராணா வழக்கில் இந்தியா வென்றது எப்படி? திருப்புமுனையாக இருந்தது என்ன
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.