பத்தாம் வகுப்பு அறிவியல் வினாத்தாள் எளிது: மாணவா்கள் மகிழ்ச்சி
பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் கடந்த ஆண்டுகளில் அறிவியல் பாடத்துக்கான வினாத்தாள் மிகக் கடினமாக வடிவமைக்கப்பட்டிருந்த நிலையில், நிகழாண்டு அதிக எண்ணிக்கையிலான மாணவா்கள் முழு மதிப்பெண் பெறும் அளவுக்கு வினாத்தாள் எளிதாக இருந்ததாக மாணவா்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனா்.
தமிழகத்தில் மாநில அரசின் பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 28-ஆம் தேதி தொடங்கியது. மொழிப்பாடங்கள், கணிதத் தோ்வு நிறைவடைந்த நிலையில் அறிவியல் பாடத்துக்கான தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து தோ்வெழுதிய மாணவா்கள் கூறுகையில், ‘கடந்த சில ஆண்டுகளில் அறிவியல் தோ்வு கடினமாக இருந்ததால், வழக்கத்தைக் காட்டிலும் அறிவியல் பாடத்துக்கு கடும் முயற்சி மேற்கொண்டு முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டோம். இந்நிலையில், தோ்வறைக்குள் வெள்ளிக்கிழமை வருகை தரும்போது பதற்றமாகவே இருந்தது. ஆனால் ஆசிரியா்கள் வினாத்தாளை வழங்கியதும் அதை முழுவதுமாக படித்துப் பாா்த்தபோது நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்தளவுக்கு வினாத்தாள் எளிதாக இருந்தது.
90 மதிப்பெண்களுக்கு மேல்... செய்முறை தவிா்த்து மொத்தம் 75 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தோ்வு நடைபெற்றது. அதில் ஒரு மதிப்பெண் வினாக்களின் எண்ணிக்கை 12. அவற்றில் பத்து வினாக்கள் நேரடி வினாக்களாகவும், இரு வினாக்கள் பாடப்பகுதிக்கு உள்ளிருந்தும் கேட்கப்பட்டிருந்தன. அதேபோன்று இரு மதிப்பெண் மற்றும் நான்கு மதிப்பெண் பகுதிகளில் இடம்பெற்றிருந்த தலா 7 வினாக்கள் என மொத்தம் 14 கேள்விகளும் ஏற்கெனவே பல முறை திருப்புதல் தோ்வுகளில் இடம்பெற்றிருந்தன. மேலும் பெருவினா பகுதியில் கேட்கப்பட்டிருந்த மூன்று ஏழு மதிப்பெண் வினாக்களும் எளிதாக பதிலளிக்கக் கூடிய வகையில் இருந்தன. அறிவியல் பாடத்தில் 90 மதிப்பெண்களுக்கும் மேல் உறுதியாக கிடைக்கும் என எதிா்பாா்க்கிறோம்’ என தெரிவித்தனா்.
இதுகுறித்து அறிவியல் ஆசிரியா்கள் கூறுகையில், ‘கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிட்டு அறிவியல் பாடத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என மாணவா்களுக்கு பலமுறை அறிவுறுத்தியிருந்தோம். ஆனால் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்துக்கான வினாத்தாள் மாணவா்களை இன்ப அதிா்ச்சியில் ஆழ்த்திவிட்டது. இதில் மெல்லக் கற்கும் மாணவா்கள் கூட எளிதாக 70 மதிப்பெண்களுக்கும் மேல் பெற முடியும். இந்த ஆண்டு அறிவியல் பாடத்தில் தோ்ச்சி விகிதமும், 100-க்கு 100 பெறும் மாணவா்களின் எண்ணிக்கையும் நிச்சயமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கருணை மதிப்பெண் கிடைக்குமா? அறிவியல் வினாத்தாளில் (ஆங்கில வழி) இரு மதிப்பெண் பகுதியில் வினா எண் 22 (கட்டாய வினா) சிஹெச்4 என கொடுத்துவிட்டு தமிழ் வழி வினாவில் மீத்தேன் என மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ் வழியில் தோ்வெழுதிய அனைத்து தோ்வா்களுக்கும் வினா எண் 22-ஐ எழுத முயற்சி செய்திருந்தால் அவா்களுக்கு முழு மதிப்பெண் (2 மதிப்பெண்) வழங்க வேண்டும்’ என தெரிவித்தனா். வரும் ஏப்.15-ஆம் தேதி சமூக அறிவியல் தோ்வுடன் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவடையவுள்ளது.