
தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு புதிய தலைவருக்கான தேர்தலில், விருப்பமனு தாக்கலுக்கான அவகாசம் நிறைவடைந்த நிலையில் நயினார் நாகேந்திரன் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனை பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் அவர்களிடமிருந்து மட்டுமே விருப்பமனு பெறப்பட்டுள்ளது என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம், அவர் தமிழக பாஜக தலைவராகிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், தலைவராக இருந்த அண்ணாமலையின் பணியை பாராட்டியும் பதிவிட்டுள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள், இன்று மாலை 4 மணிக்குள் விருப்பமனுவைத் தாக்கல் செய்ய கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த அவகாசம் நிறைவு பெற்றுவிட்டதால், விருப்பமனு தாக்கல் செய்திருந்த நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக புதிய தலைவராக போட்டியின்றி, ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இன்னும் சற்று நேரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செய்தியாளர்களை சந்திக்கவிருக்கும் நிலையில், புதிய தமிழக பாஜக தலைவர் யார் என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது.
பாஜக - அதிமுக கூட்டணி முறிவுக்கு அடிப்படைக் காரணமாக, இருந்ததாகக் கூறப்படும் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மாற்றப்படுவார் என மார்ச் மாதத் தொடக்கம் முதல் பேச்சு சூடுபிடித்து வந்த நிலையில், இன்று அது உறுதிசெய்யப்பட்டு, புதிய தலைவர் தேர்வும் செய்யப்பட்டுவிட்டார்.
பாஜக புதிய தலைவர் நயினார் நாகேந்திரன் என்பது உறுதிசெய்யப்பட்டுவிட்டாலும், பாஜக தேசிய நிர்வாகிகள் கிஷன் ரெட்டி, தருண் சுக் ஆகியோர், மாநில தலைவர் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்றும் சென்னை ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நாளை வெகு கோலாகலமாக பாஜக புதிய தலைவர் பதவியேற்பு விழா நடைபெறவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்தான் தலைவர், இல்லை இல்லை, இவர்தான் என சிலரது பெயர்கள் தலைவர் பதவிக்கான போட்டியில் இடம்பெற்றிருந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகைக்குப் பிறகே, போட்டியில் இருந்தவர்களே, நயினார் நாகேந்திரன் விருப்பமனுவை முன்மொழிந்துவிட்டனர்.
2 மணி முதல் 4 மணி வரை விருப்பமனு அளிக்கலாம் என்று அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், 4 மணிக்குப்பிறகு, நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்பமனு அளித்திருந்ததால் அவர் போட்டியின்றித் தேர்வானது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திடீரென கிளம்பிய விதிமுறை பூதம்
தமிழக பாஜக தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடவிரும்புவோர் 10 ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருப்பதாக நேற்று திடீரென விதிமுறைகள் வெளியாகின.
ஆனால், போட்டியில் இருப்பதாகக் கூறப்படும் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் ஆகியோருக்கு 10 ஆண்டுகள் ஆகவில்லை என்பதால் போட்டியிடும் தகுதியை இழந்துவிட்டதாகக் கூறப்பட்டது. இப்படியொரு விதி இருக்கும்போது அண்ணாமலை எப்படி தலைவரானார்? என்றும் கேட்கப்பட்டது. விதிமுறை உருவாக்கப்படுவதே கட்சித் தலைவர்களால்தான் . அப்படியிருக்க அதனை மாற்ற முடியாதா என்ன? என்றும் கருத்துகள் பகிரப்பட்டன.
அதன்படியே, தேர்தல் விதிகள் மாற்றப்பட்டுவிட்டதாக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பதிலளித்த நிலையில், புதிய விதி வெளியிடப்பட்டது குறித்து, இதற்குப் பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாமே என்றும் பலரும் சமூக வலைதளங்களில் கருத்திட்டு வருகிறார்கள்.
இதையும் படிக்க.. பாஜக மாநில தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்! தேர்தல் விதி என்னவானது? பொறுப்பாளர் பதில்