
திருவள்ளூர்: திருவள்ளூரில் இயற்கை வேளாண் பொருள் கண்காட்சியை அம்மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தொடக்கி வைத்தார்.
திருவள்ளூரில் நஞ்சில்லா உணவுப் பொருள் கிடைக்கும் வகையில் இயற்கை வேளாண் பொருள்கள் கண்காட்சியில் இடம்பெற்ற பொருள்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
திருவள்ளூர் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, மாவட்ட இயற்கை உழவர்கள் சார்பில் இயற்கை வேளாண் பொருள்கள் கண்காட்சி உழவர் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கண்காட்சியை ஆட்சியர் தலைமை வகித்து இயற்கை வேளாண் பொருள்கள் கண்காட்சியை தொடக்கி வைத்தார். அதைத்தொடர்ந்து கண்காட்சியில் ரசாயன பயன்பாடின்றி இயற்கை முறையில் விளைவித்த காய்கறிகள், பழவகைகள், சீரக சம்பா அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி, வயக்ரா அரிசி, கருப்பு கவுணி அரிசி, கிச்சடி சம்பா அரிசி, கைக்குத்தல் அரிசி, காட்டுயானை, வரகு, குதிரைவாலி, திணை, வெள்ளைச்சோளம் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் உள்ளிட்ட பொருள்களை அவர் பார்வையிட்டார்.
அதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது:
பொதுமக்கள் அனைவருக்கும் நஞ்சில்லா உணவு கிடைக்க வேண்டும். அதன்பேரில் உழவர்கள் இயற்கை முறையில் விளைவித்த உணவு தானியம் மற்றும் பழவகைகள், காய்கறிகள் ஆகியவைகளை கண்காட்சியில் இடம் பெறச் செய்துள்ளனர்.
இதை பொதுமக்கள் அனைவருக்கும் குறைந்த விலையில் வழங்கவே இயற்கை வேளாண் பொருள்கள் கண்காட்சி நடத்தப்படுகிறது. இனி வருங்காலங்களில் இயற்கை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மாதந்தோறும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை இயற்கை வேளாண் பொருள்கள் கண்காட்சி நடத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குநர் கலாவதி, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குநர் சசிரேகா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஜெயகுமாரி அனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க: அன்னவாசல் அருகே கோயிலில் கும்மியடித்து பெண்கள் வழிபாடு!