
வெறுப்பு அரசியலைவிட அன்பை விதைக்கும் அரசியல்தான் வலுவானது, ஆற்றல் வாய்ந்தது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப். 14) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளான சமத்துவ நாள் விழாவில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
”ஆதிதிராவிடர்களுக்கு நலத்திட்ட உதவி செய்வதோடு நம்முடைய அரசினுடைய கடமை முடிந்துவிட்டதாக நான் கருதவில்லை. சுயமரியாதை சமதர்மச் சமூகத்தை உருவாக்குவதற்கு இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும் என்று இதைத்தான் நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். நம்முடைய பாதையும், பயணமும் மிக நீண்டது. என்னைப் பொறுத்தவரைக்கும், மகாத்மா ஜோதிபா ஃபுலே – புரட்சியாளர் அம்பேத்கர் - தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற தலைவர்கள் உருவாக்க பாடுப்பட்ட, சாதிய ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமத்துவச் சமுதாயத்தை அமைக்க வேண்டும்!
இதற்கான மாற்றம் தனிமனிதர்களில் தொடங்கி, சமூகத்தின் ஒட்டுமொத்த எண்ணமாக வெளிப்படவேண்டும்! அப்போதுதான், ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாக இந்த மண்ணிலேயும், மக்களுடைய எண்ணத்திலேயும் இருக்கின்ற ஏற்றத்தாழ்வுகளை நீக்க முடியும்!
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கொண்ட வரலாற்றை கடந்து நூறு, இருநூறு ஆண்டுகளாக நாம் அடைந்திருக்கின்ற வளர்ச்சியும், வெற்றியும், சமூக மாற்றமும், கொஞ்சம்தான்!
நமக்குள்ளே ஏற்பட்டிருக்கின்ற முற்போக்கு, சமத்துவ எண்ணங்களும், சிந்தனைகளும் எல்லோரிடமும் ஏற்படவேண்டும். அதற்காக நாம் ஓயாமல் உழைக்கவேண்டும். வெறுப்பு அரசியலைவிட அன்பை விதைக்கும் அரசியல்தான் வலுவானது, ஆற்றல் வாய்ந்தது என்று நான் உளப்பூர்வமாக நம்புகிறேன்!
தமிழ் – தமிழர் என்ற உணர்வுதான் நம்மை ஒன்றிணைக்கும்! நம்முடைய பாதையில் இடர்கள் ஏற்படும் - ஏற்படுத்தப்படும் - அதையெல்லாம் உணர்ந்துதான் நம்முடைய உழைப்பைக் கொடுக்க வேண்டும்! அதைத்தான் தந்தை பெரியார் - புரட்சியாளர் அம்பேத்கர் முதலானோர் செய்தார்கள்.
எதிரிகளையும் - எதிரிகளின் பரப்புரைகளையும் அடையாளம் கண்டு கொண்டாலே, அந்தத் தடைகளை உடைப்பது எளிதாகிவிடும். இந்தச் சமூகத்தில் ஆங்காங்கே நடைபெறுகின்ற ஒரு சில பிற்போக்குத்தனமான செயல்களைக் காட்டி, இதுதான், பெரியார் மண்ணா? இதுதான், அம்பேத்கர் மண்ணா? என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறவர்களின் எண்ணம் என்ன தெரியுமா? இந்த மண்ணில் இந்தக் கொடுமைகள் இன்னும் தொடர்கின்றதே என்ற கவலை கிடையாது. அவர்களுடைய எண்ணம் “நீங்கள் மாற்றத்தை விதைத்துவிட்டதாக, பண்படுத்திவிட்டதாக பெருமைப்படுகின்ற மண்ணில் இன்னமும் எங்களுடைய பழமைவாதமும், பிற்போக்குத்தனமும், அடக்குமுறையும் இருக்கிறது என்று காண்பிக்கின்ற ஆணவம்தான் அந்த பேச்சு!
நம்முடைய உழைப்பால், சமூகத்தில் எஞ்சியிருக்கின்ற அந்தக் கொடுமைகளையும் நிச்சயம் களையெடுப்போம்! சமூகப் பணிகளாலும், சட்டப் பணிகளாலும் சமத்துவத்தை நோக்கிய நகர்வுகளை நாம் சாத்தியப்படுத்தி ஆகவேண்டும்.
அதற்கு, தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் உள்ளிட்ட மானிட சமுதாயத் தலைவர்கள் தந்திருக்கும் அறிவொளியில், மக்களோடு பயணிப்போம்! பொது உடைமை, சமத்துவம், சமூகநீதி கொண்ட சமுதாயத்தை உருவாக்க புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளில் மதவெறியை மாய்த்து மனிதநேயம் காப்போம்! ஜெய் பீம்!” என்று பேசினார்.
இதையும் படிக்க: தமிழ்ப் புத்தாண்டு: பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து!