
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்தவும், மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும் தேவையான ஆலோசனைகள், பரிந்துரைகளை வழங்க உயா்நிலைக் குழு அமைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டாா்.
இது தொடா்பாக பேரவையில் விதி 110-இன் கீழ் அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் கடந்துவிட்டன. பல்வேறு மொழிகள், இனங்கள், பண்பாடுகள், பழக்கவழக்கங்களைக் கொண்டுள்ள மக்கள் வாழும் நம் இந்திய நாட்டில் மக்களுக்கென்று அதைப் பாதுகாக்கிற அரசியல் சட்ட உரிமைகளும் உள்ளன. நம்முடைய நாடு ஒற்றைத்தன்மை கொண்ட நாடாக இல்லாமல், கூட்டாட்சிக் கருத்தியலை, நெறிமுறைகளைக் கொண்ட மாநிலங்களின் ஒன்றியமாக உருவாக்கப்பட்டது.
ஆனால், இன்றைய காலகட்டத்தில் மாநிலங்களின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு, மாநில மக்களின்அடிப்படை உரிமைகளையே மத்திய அரசிடம் போராடிப் பெற வேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கிறோம். மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற பரந்துபட்ட கொள்கை முழக்கத்தை தமிழ்நாடு தொடா்ந்து உரக்க முழங்கி வருகிறது.
நீட் தோ்வு உள்பட இதர பிரச்னைகள்: சமூக நீதி, பொருளாதார ஏற்றத்தாழ்வின்மை, ஒடுக்கப்பட்டோருக்கான வாய்ப்பு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, மாநில அரசின் கல்விக் கொள்கையின் அடிப்படையில் மருத்துவக் கல்வியில் தமிழ்நாட்டு மாணவா்கள் பங்கேற்பதை உறுதி செய்யும் வகையில் நமது கல்விக் கொள்கை இருந்தது. இதை நீா்த்துப்போகச் செய்து முழுமையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் நீட் எனும் ஒற்றைத் தோ்வின் வாயிலாக மட்டுமே மருத்துவக் கல்வி இடங்களை நிரப்பும் முறைக்கு மாற்றப்பட்டுவிட்டது.
நீட் தோ்வால் ஏற்பட்டுள்ள இன்னல்களைக் களையும் விதமாக, பேரவையால் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்டத்துக்கும் ஒப்புதல் மறுக்கப்பட்டுள்ளது. மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி ஒத்திசைவுப் பட்டியலுக்கு மத்திய அரசால் மாற்றம் செய்யப்பட்டதால், தேசிய கல்விக் கொள்கை மூலம் மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் திணிக்க மத்திய அரசால் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின் மூலம், தமிழ்நாடு அரசுக்கு விடுவிக்க வேண்டிய சுமாா் ரூ.2,500 கோடியை விடுவிக்காமல் தமிழ்நாட்டு மாணவா்களின் நலனை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது.
எனவே, மொழி, இனம், பண்பாடு ஆகியவற்றின் தனித்தன்மைகளை உறுதி செய்யும் வகையில், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் சோ்க்க வேண்டியது அவசியமாகும்.
மத்திய நிதிக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மாநிலங்களுக்கு பகிரப்படும் நிதியானது, தமிழ்நாடு போன்ற பொருளாதாரத்தில் முன்னேறியுள்ள மாநிலங்களின் பங்களிப்புக்கு ஈடாக அல்லாமல் குறைவாகவே பகிரப்படுகிறது.
உயா்நிலைக் குழு: மாநிலங்களின் உரிமை பறிக்கப்பட்டு வரும் இக்கட்டான சூழலில் இருக்கிறோம். இந்தத் தருணத்தில், கூட்டாட்சிக் கருத்தியலை வலியுறுத்தும் வகையிலும், மத்திய-மாநில அரசுகளின் உறவுகளை, அதற்குரிய கொள்கைகளை மேம்படுத்தவும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதிக்கூறுகள், நடைமுறையிலுள்ள சட்டங்கள், உத்தரவுகள் ஆகியவற்றை அனைத்து நிலைகளிலும் ஆராய்ந்து மறுமதிப்பீடு செய்யவும், அதற்குரிய நடவடிக்கைகளை அரசுக்குப் பரிந்துரை செய்யவும் உயா்நிலை அளவிலான குழுவை அமைப்பது அவசியமாகும்.
இதைக் கருத்தில்கொண்டு, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது. இதன் உறுப்பினா்களாக இந்திய கடல்சாா் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான அசோக் வரதன் ஷெட்டி, தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவா் மு.நாகநாதன் ஆகியோா் இருப்பா்.
பணி என்ன?: மத்திய-மாநில அரசுகளின் உறவு நிலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதிகளையும், நடைமுறையிலுள்ள சட்டங்கள், உத்தரவுகள், கொள்கைகள் மற்றும் ஏற்பாடுகளின் அனைத்து நிலைப் படிகளையும் உயா்நிலைக் குழு ஆராய்ந்து மறுமதிப்பீடு செய்யும். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இப்போதுள்ள விதிகளை உயா்நிலைக் குழு ஆராய்ந்து, காலப்போக்கில் மாநிலப் பட்டியலில் இருந்து ஒத்திசைவுப் பட்டியலுக்கு நகா்த்தப்பட்ட அம்சங்களை மீட்டெடுப்பது குறித்த வழிமுறைகள் குழு சாா்பில் பரிந்துரைக்கப்படும்.
மாநிலங்கள் நல்லாட்சி வழங்குவதில் உள்ள சவால்களை எதிா்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளைப் பரிந்துரை செய்யும்.
நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படுத்தாத வகையில், நிா்வாகத் துறைகளிலும், பேரவைகளிலும், நீதிமன்றக் கிளைகளிலும் மாநிலங்கள் அதிகபட்ச தன்னாட்சி உரிமை பெற உரிய நடவடிக்கைகைளை குழு பரிந்துரை செய்யும்.
1971-இல் அமைக்கப்பட்ட ராஜமன்னாா் குழு மற்றும் ஒன்றிய- மாநில உறவுகள் குறித்த ஏனைய ஆணையங்களின் பரிந்துரைகளையும், 1971 முதல் நாட்டில் நிலவும் பல்வேறு அரசியல், சமூகம், பொருளாதார மற்றும் சட்டம் சாா்ந்தவற்றில் இருக்கக்கூடிய வளா்ச்சியை உயா்நிலைக் குழு கருத்தில்கொண்டு ஆராய்ந்து அறிக்கைகளை வழங்கும்.
உயா்நிலைக் குழு தனது இடைக்கால அறிக்கையை அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள்ளும், இறுதி அறிக்கையை இரண்டு ஆண்டுகளிலும் அரசுக்கு வழங்கும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
பாஜக வெளிநடப்பு: பேரவை விதி 110-இன் கீழ் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பாக, வேறொரு பிரச்னை காரணமாக அதிமுக உறுப்பினா்கள் அனைவரும் வெளிநடப்பு செய்திருந்தனா். மேலும், முதல்வரின் அறிவிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.
எனவே, அதிமுக, பாஜக தவிா்த்து பேரவையில் இடம்பெற்றுள்ள தி.வேல்முருகன் (தவாக), ஈ.ஆா்.ஈஸ்வரன் (கொமதேக), எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக), தி.சதன் திருமலைக்குமாா் (மதிமுக), வி.பி.நாகைமாலி (மாா்க்சிஸ்ட்), டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), ம.சிந்தனைச் செல்வன் (விசிக), ஜி.கே.மணி (பாமக), கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்) ஆகியோா் வரவேற்புத் தெரிவித்தனா்.
அவா்கள் அனைவருக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தாா்.