மகாராஷ்டிரத்தில் ஹிந்தி கட்டாயமில்லை; ஆனால் பிற மாநிலங்களில்..? மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கேள்வி

ஹிந்தி திணிப்பு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?
மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்TN DIPR
Published on
Updated on
1 min read

பாஜக ஆளும் மகாராஷ்டிரத்தில் ஹிந்தி கட்டாயமில்லை என்று அம்மாநில முதல்வர் அறிவித்திருக்கும்போது, பிற மாநிலங்களில் மத்திய அரசு என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறதென தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசிய கல்வி கொள்கையின்கீழ், மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை நாடெங்கிலும் கொண்டு வருவதற்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

மராத்தி மொழியின் பிறப்பிடமான மகாராஷ்டிரத்தில் ஹிந்தியும் கட்டாய மொழியாக பள்ளிகளில் பின்பற்றப்படும் என்று அம்மாநில அரசு எடுத்திருந்த முடிவுக்கு எதிர்ப்புக் குரல்கள் வலுத்ததால் இப்போது மகாராஷ்டிரத்தில் மராத்தி மட்டுமே கட்டாயம் என்று அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் அறிவித்திருக்கிறார்.

இதையடுத்து, தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இந்த அறிவிப்பை வரவேற்றிருப்பதுடன், மத்திய அரசுக்கு சில கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு. க. ஸ்டாலின் தமது எக்ஸ் தளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

ஹிந்தியை மூன்றாவது மொழியாக கட்டாயப்படுத்துவதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதைத்தொடர்ந்து, மகாராஷ்டிரத்தில் மராத்தி மட்டுமே கட்டாயம் என்று அம்மாநில முதல்வர் கூறியிருக்கிறார்.

இதன்மூலம், ஹிந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தி கட்டாயப்படுத்தப்படுவதற்கு பரந்தளவில் எதிர்ப்பும் கண்டனமும் எழுந்ததையடுத்து மகாராஷ்டிர முதல்வர் தமது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கியுள்ளார்.

இந்தநிலையில், மத்திய அரசும் உள்துறை அமைச்சகமும் கீழ்காணும் விஷயங்களை தெளிவுபடுத்த வேண்டும்:

மகாராஷ்டிரத்தில் தேசிய கல்வி கொள்கையின்கீழ், மராத்தி தவிர்த்து மூன்றாவது மொழியாக பிற மொழி எதையும் கட்டாயம் படித்தாக வேண்டுமென்பதில்லை என்ற நிலைப்பாட்டை இப்போது மத்திய அரசு ஏற்கிறதா?

தேசிய கல்வி கொள்கையின்கீழ், மூன்றாவது மொழியாக ஒரு மொழியை பாடமாக கற்பிக்க வேண்டியதில்லை என்ற தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு வெளியிடுமா?

மூன்றாவது மொழி கட்டாயமென்பதை மாநிலங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற காரணத்தைச் சுட்டிக்காட்டியே தமிழ்நாட்டுக்கு விடுவிக்கப்படாமல் வைத்திருக்கும் ரூ. 2,152 கோடி நிதியை மத்திய அரசு விடுவிக்குமா?

மேற்கண்ட கேள்விகளுக்கு மத்திய அரசு விளக்கமளிக்க முதல்வர் மு. க. ஸ்டாலின் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com