_.jpeg?w=480&auto=format%2Ccompress&fit=max)
நெல்லை: திருநெல்வேலியில் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா எனக்கும் சொந்தமானது என்று உரிமையாளர் கவிதா சிங்கின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் கவிதா சிங்கின் மகளுக்கு அண்மையில் திருமணமாகி, இரண்டு மாதங்களுக்குள், கணவர் வீட்டார் வரதட்சிணைக் கொடுமை செய்வதாகவும், இருட்டுக்கடை உரிமையை தனது பெயரில் எழுதிக் கொடுக்குமாறு துன்புறுத்துவதாகவும் நெல்லை காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதுவரை, இருட்டுக்கடை அல்வா என்றால் அதன் ருசி, அந்தக் கடையின் அமைவிடம் போன்றவைதான் பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது, கடையின் உரிமையாளர் யார், இருட்டுக்கடையின் பின்னால் இருக்கும் சிக்கல்கள் போன்றவை வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியிருக்கிறது.
கடையைத் தொடங்கியவர், அவர்களது பிள்ளைகள், கடையின் வாரிசு யார், உரிமை யாருக்கு இருக்கிறது என்பது போன்ற தகவல்கள் ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது கடையின் உரிமையாளர் என அறியப்படும் கவிதா சிங்கின் சகோதரர் நயன் சிங் செய்தியாளர்களை சந்தித்திருக்கிறார்.
உலகப் புகழ்பெற்ற நெல்லை டவுனில் உள்ள இருட்டுக்கடை அல்வா கடை மிகவும் புகழ்பெற்றது. சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக இருட்டுக்கடை அல்வா செயல்பட்டு வருகிறது. இந்த அல்வா கடையை நடத்தி வந்த ஹரி சிங் என்பவர் கொரோனா தொற்றின்போது தற்கொலை செய்து கொண்டார்.
இதைத்தொடர்ந்து இந்தக் கடையின் விவகாரம் பூதாகரமாக ஆனது. இந்த கடை தற்போது நயன் சிங்கின் சகோதரி கவிதா நடத்தி வருகிறார். இந்தக் கடை தொடர்பாக பிஜிலி சிங்கின் உறவினர் ஜெயராம் சிங்கின் மகன் நயன் சிங் நெல்லை டவுனில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறும் போது இந்த கடை தனக்கு சொந்தமான கடை என்றும் இந்தக் கடை தொடர்பாக 1999 ம் ஆண்டு தனது பெயரில் பிஜிலி சிங்கும் அவரது மனைவியும் உயில் எழுதி வைத்துள்ளதாகவும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும் இந்த கடை தனக்கே சொந்தம். ஆனால் இந்த கடையை நீதிமன்றத்தின் மூலமாக சரியான நடவடிக்கை எடுத்து பெறுவோம். எனக்கு ஆதரவாக தீர்ப்பு வரும் என்று நம்புகிறேன். இந்த கடையை நான் அடாவடி செய்து பிடிப்பதற்கு எப்போதும் முயற்சி செய்ய மாட்டேன். நீதிமன்றம் மூலமாக எனக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அதன் மூலமாக இந்தக் கடையை கைப்பற்றுவேன்.
மேலும் அவர் கூறும்போது தனது தங்கையின் மகள் மீது அபாண்டமாக அவரது மாமனாரும் கணவரும் குற்றம் சாட்டி உள்ளார்கள். இதை நான் ஒருபோதும் நம்ப மாட்டேன் அவர் முற்றிலுமாக பொய்யான தகவலை தெரிவித்து வருகிறார். அவருக்கும் இந்த கடைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவரும் இந்த கடையை அபகரிக்கும் நோக்கில் செயல்படக்கூடாது என அவர் தெரிவித்தார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.