
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நடத்தும் துணைவேந்தர்கள் மாநாட்டை அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் புறக்கணித்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 52 பல்கலைக்கழகங்களில் 34 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
உதகை ராஜ்பவன் மாளிகையில் பல்கலைக்கழகத் துணைவேந்தா்கள் மாநாடு வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை (ஏப். 25, 26) ஆகிய இரு நாள்கள் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டை காலை 11.30 மணிக்கு தொடங்கிவைத்து குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கர் துவக்க உரையாற்றவுள்ளார். இதற்காக தில்லியில் இருந்து கோவை வரும் தன்கர், ஹெலிகாப்டர் மூலம் உதகை செல்லவுள்ளார்.
இந்த நிலையில், தமிழக அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர்.
மதுரை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர்கள் இன்னும் உதகை ராஜ்பவனுக்கு வரவில்லை.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக திருநெல்வேலியிலிருந்து வந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர், பாதி வழியில் முடிவை மாற்றிக் கொண்டு திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஞாயிற்றுக்கிழமை குடியரசுத் துணைத் தலைவர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டு பணிகளில் இருப்பதால், மாநாட்டில் பங்கேற்கவில்லை என்று கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த நிலையில், அழைப்பு விடுக்கப்பட்ட 52 பல்கலைக்கழகங்களில் 34 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளதாக ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழக பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை நீக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவுக்கு சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.
இதனைத் தொடர்ந்து, அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவாளர்கள் கூட்டத்தை கூட்டி, முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.