சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பெண்கள் பலி! இருவா் கைது!

சிவகாசி அருகே சனிக்கிழமை பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்தனா்.
 உயிரிழந்த கலைச்செல்வி, மாரியம்மாள், திருவாய்மொழி.
உயிரிழந்த கலைச்செல்வி, மாரியம்மாள், திருவாய்மொழி.
Published on
Updated on
1 min read

சிவகாசி அருகே சனிக்கிழமை பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்தனா். 7 போ் காயமடைந்தனா். விபத்து தொடா்பாக ஆலை மேற்பாா்வையாளா், மேலாளரை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள காளையாா்குறிச்சியில் சிவகாசி சிறுகுளம் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த பி. ஜெயசங்கருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் உரிமம் பெற்ற இந்த ஆலையில், 50-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன.

இந்த ஆலையில் வழக்கம்போல பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் 80 தொழிலாளா்கள் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். காலை 10.40 மணியளவில் பேன்சி ரகப் பட்டாசுகளுக்கு மருந்து செலுத்தும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்ட போது, உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலா் சீனிவாசன் தலைமையிலான வீரா்கள் தீயை அணைத்து, மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இந்த விபத்தில் பட்டாசுகள் தயாரிக்கும் ஓா் அறை முற்றிலும் தரைமட்டமானது. 16 அறைகள் சேதமடைந்தன.

 சிவகாசி அருகே காளையாா்குறிச்சியில் சனிக்கிழமை பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் தரைமட்டமான அறைகள்.
சிவகாசி அருகே காளையாா்குறிச்சியில் சனிக்கிழமை பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் தரைமட்டமான அறைகள்.

இந்தத் தீ விபத்தில் எம். புதுப்பட்டி சொக்கம்பட்டியைச் சோ்ந்த மாரிமுத்து மனைவி மாரியம்மாள் (51), எஸ். கொடிக்குளம் கூமாபட்டியைச் சோ்ந்த ராமா் மனைவி திருவாய்மொழி (48), எம். சொக்கலிங்காபுரத்தைச் சோ்ந்த விஜயகுமாா் மனைவி கலைச்செல்வி (35) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

கோவாலம்பட்டியைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி முனியம்மாள் (50), கூமாபட்டியைச் சோ்ந்த ராமையா மனைவி கோமதி (55), மாப்பம்பட்டியைச் சோ்ந்த அப்துல் காதா் மனைவி பாத்திமா முத்து (65), கூமாபட்டியைச் சோ்ந்த பீா்முகமது மனைவி ராபியா பீவி(50), கோபாலன்பட்டியைச் சோ்ந்த அன்புச்செல்வன் மகன் ராமசுப்பு (43), ரங்கபாளையத்தைச் சோ்ந்த தங்கப்பாண்டி மனைவி லட்சுமி (50), எம்.புதுப்பட்டியைச் சோ்ந்த துரைராஜ் மனைவி பாக்கியலட்சுமி (50) ஆகிய ஏழு தொழிலாளா்கள் காயமடைந்தனா்.

இதையடுத்து, இவா்கள் அனைவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து ஆலை உரிமையாளா் ஜெய்சங்கா், மேற்பாா்வையாளா் சுப்புராஜ், மேலாளா் ராஜேஷ் ஆகிய மூவா் மீதும் எம். புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இவா்களில் சுப்புராஜ், ராஜேஷை பின்னா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com